பிரித்தானியாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


பிரித்தானியாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ள நிலையில், பிரித்தானியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

உடனடியாக எந்த மாற்றமும் ஏற்படபேவதில்லை. மாறாக அடுத்த கட்டமாக என்ன செய்வதென்று அரசியல்வாதிகள் தீர்மானிக்கும் வரையிலும், பிரித்தானியா தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்கும்.

குறித்த விடயம் தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக பிரஸ்ஸல்ஸில் நெருக்கடிகால கூட்டங்கள் இடம்பெறும்.

அவ்வாறெனில், அதிகாரப்பூர்வ வெளியேற்றம் எப்போது ஆரம்பிக்கும் என்பதே பலரின் கேள்வி? லிஸ்பன் உடன்படிக்கையின் 50ஆவது பிரிவு அதற்கான நடைமுறையை விளக்குகிறது.

அதன்படி, வெளியேறுவதற்கான முறையான அறிவிப்பு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசமிருக்கிறன.

எனினும், அது எப்போது நடக்குமென்று தெரியவில்லை. பிரித்தானியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் புது உடன்படிக்கையினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

முதலாவது வர்த்தகம். ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்குள் பிரித்தானியா தொடர்ந்தும் நீடிக்க விரும்பினால் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இரண்டாவது ஐரோப்பிய ஒன்றிய விதிகள், கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நாட்டைச் சேர்ந்தவர்களின் சுதந்திர நடமாட்டத்தை அனுமதிக்க வேண்டியும் வரலாம்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்கனவே வாழும் பிரித்தானிய மக்களின் நிலைமை மற்றும் பிரித்தானிய, ஐரோப்பிய ஒன்றிய நாட்டுக்குடிகளின் நிலைமை குறித்தும் முடிவெடுக்கப்பட வேண்டும்.

பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான புதிய உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட பின்னர், இதுவரை ஐரோப்பிய ஒன்றியம் இயற்றிய சட்டங்கள் அனைத்தையும் பிரித்தானிய சட்டங்களாக புதுப்பிக்க வேண்டும்