புதிய வரித் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவிலும், பதுளையிலும் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஊவா மாகாண சபைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், வங்கி ஊழியர்கள் சங்கம், மின்சார சபை ஊழியர்கள், ஊவா வெல்லஸ விரிவுரையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களுக்கு சுமையினை ஏற்படுத்தும் அதிக வரி முறைமை நீக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோசங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, நுவரெலியாவில் புதிய வரி அறவீட்டுக்கு எதிராக அரச, தனியார் வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போதைய அரசாங்கத்தினால் புதிதாக அமுல்படுத்தப்பட்ட வரிச் சீர்திருத்தங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்து நுவரெலியா பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக நுவரெலியாவில் இயங்கி வரும் அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
குறிப்பாக அரச மற்றும் தனியார் ஊழியர்களிடம் மாதாந்தம் முறையற்ற வகையில் வரி அறவிடுவதினை எங்களால் ஏற்க முடியாது என தெரிவித்து புதிய வரி அறவீட்டுக்கு எதிராக வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய வரித் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தின் பின்னர் உரிய தீர்வொன்று கிடைக்காவிடின் பாரிய போராட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளதாக ஊழியர்கள் எச்சரித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.