மகிந்தவின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார் சொய்சா!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மகிந்தவின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார் சொய்சா!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது ஆட்சி காலத்தின் போது நாட்டின் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக தனது நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்தி வந்தார் என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச பிரதமரை ஓரம் கட்டிவிட்டே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளார் என்று விஜித விஜயமுனி சொய்சா நேற்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஒருவருக்கொருவர் முரணாகாத வகையில் ஜனாதிபதி அல்லது பிரதமர் ஆட்சி செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினருமான மகிந்த தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சொய்சா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விஜயமுனி சொய்சா இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் பிரதமர் ஒருபொம்மையாகவே பயன்படுத்தப்பட்டுள்ளார் என்று விஜயமுனி சொய்சா கூறியுள்ளார்.

நாட்டின் ஆட்சியானது சட்டம் இயற்றும் துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகியமூன்று துறைகளிலும் சமமாக அமைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இந்த மூன்று துறைகளும் சுதந்திரமாக செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் நிலையான அரசியல், பொருளாதாரம் ஆகியன சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது, அத்துடன் எமது நாடு சர்வதேச சமூகம் மூலம் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றது என்றும் விஜித விஜயமுனி சொய்சா கூறியுள்ளார்.

சர்வதேசம் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மரியாதை செலுத்தவில்லை, நாட்டின் கொள்கைகள், மரபு ரீதியான கொள்கைகள் மற்றும் ஜனநாயக செயல்திட்டங்களுக்கே செலுத்தியுள்ளது என விஜித விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.