மத்திய வங்கி அரசியல் மயப்படுத்துவதனை தடுக்கும் முதல் போராட்டத்தில் வெற்றி: டியு.குணசேகர

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மத்திய வங்கி அரசியல் மயப்படுத்துவதனை தடுக்கும் முதல் போராட்டத்தில் வெற்றி: டியு.குணசேகர

மத்திய வங்கி அரசியல் மயப்படுத்தப்படுவதனை தடுக்கும் முதல் போராட்டத்தில் வெற்றி கிட்டியுள்ளது என கொம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டியு.குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மத்திய வங்கி அரசியல் மயப்படுத்தப்படுவதனை தடுக்கும் முதல் போராட்டம் வெற்றியளித்துள்ளது.

மத்திய வங்கியின் ஆளுனர் தொடர்ந்தும் பதவி வகிப்பாரா? வேறு ஒருவரை நியமிப்பதா என்பது அரசாங்கத்திற்குள் எழுந்த பிரச்சினையாகும்.

பதில் ஆளுனர் ஒருவரை நியமித்து கோப் குழுவின் அறிக்கை வந்ததன் பின்னர் மீளவும் அர்ஜூன் மகேந்திரனை நியமிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சித்தார்.

மத்திய வங்கியை அரசியல் மயப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேவை காணப்பட்டது.

எனினும் இந்த தேவையை ஜனாதிபதி மைத்திரிபால தோற்கடிக்க எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது.

அர்ஜூன் மகேந்திரன் ஓர் முதலாளியைப் போன்றே செயற்பட்டார். இது தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதனால் அது பற்றி அதிகம் பேச விரும்பவில்லை.

மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்து அரசியல் மயப்படுத்தல்களுக்கு அடிபணியக் கூடாது என மத்திய வங்கியின் புதிய ஆளுனரை கோருகின்றோம்.

ஜனாதிபதி நேரத்திற்கு நேரம் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். அரசாங்கம் மக்கள் மீது வரிச் சுமையை திணித்துள்ளது.

இந்த அரசாங்கத்திற்கு கொள்கையும் எதிர்காலத் திட்டங்களும் கிடையாத ஒன்று என டியு.குணசேகர தெரிவித்துள்ளார்.