மற்றுமொரு மிதப்பு பாலம் கவிழ்ந்து விபத்து


மற்றுமொரு மிதப்பு பாலம் கவிழ்ந்து விபத்து

களுத்துறை தெற்கு பிரதேசத்தில் களுகங்கையில் மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

களுகங்கையின் கல்பாத பகுதியில் இருந்து பொலொஸ்ஸகம பகுதிக்கு மிதப்பு பாலம் மூலம் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஐந்து பேர் குறித்த மிதப்பு பாலத்தில் பயணித்துள்ளனர்.

மேலும், மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மிதிவண்டி ஒன்றும் மிதப்பு பாலத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனர்த்ததில் சிக்கிய நான்கு பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் ஒருவரை காணவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போனவரை தேடும் பணியில் கடற்படையினரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு (03) படகு விபத்துக்குள்ளான போது அதில் பயணித்த ஒருவர் உயிர்காக்கும் அங்கி அணிந்திருக்கவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கடந்த 23ஆம் திகதி திருகோணமலை, கிண்ணியா, குறிஞ்சாங்கேணி குளத்தை கடக்கும்போது மிதப்புபாலம் கவிழ்ந்ததில் நான்கு சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மேலும் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.