பிரதமர் பதவி குறித்த ஜனாதிபதியின் விளக்கக் கடிதத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குப் பதிலளித்துள்ளார்.
அதில், மக்களின் ஆணையை நேரடியாகப் புறக்கணித்து ஜனாதிபதி நியமிக்கும் உத்தேச அமைச்சரவைக்கு எந்தவொரு உறுப்பினர்களையும் ஐக்கிய மக்கள் சக்தி நியமிக்காது என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு மே 12 ஆம் திகதி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு அமைக்கப்படும் அரசாங்கத்தில் மாத்திரமே தம்மால், பிரதமராக பணியாற்ற முடியும் என்று சஜித் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்த போது, அதனை மறுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள சஜித் பிரேமதாச, மக்களின் கோரிக்கைகளை பொருட்படுத்தாமல் ஜனாதிபதியை காலவரையறையின்றி, அந்த பதவியில் இருக்க அனுமதிக்கும் வேலைத்திட்டமொன்றில் பிரவேசிப்பது மக்களின் ஆணைக்கு பாரிய அடியாகும் என தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.