முத்துசிவலிங்கம் உட்பட மூவருக்கு எதிராக விசாரணை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


முத்துசிவலிங்கம் உட்பட மூவருக்கு எதிராக விசாரணை

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் தலைவர்-பாராளுமன்ற உறுப்பினர்-இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பெயரளவு தலைவர் முத்து சிவலிங்கம், மன்றத்தின் பணிப்பாளர் சிவராஜா மற்றும் உதவி பணிப்பாளர் லோகநாதன் ஆகியோரிடம் இரகசிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளத் தயாராகி வருவதாக பாதுகாப்பு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் அரச சொத்து மோசடி தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்துள்ள முறைப்பாடு குறித்தே இரகசிய பொலிஸார் விசாரணை முன்னெடுக்கவுள்ளனர்.

பொலிஸ் நிதி மோசடி பிரிவு, பாரிய குற்ற ஊழல்கள் ஒழிப்பு ஜனாதிபதி ஆணைக்குழு, இரகசிய பொலிஸ் மற்றும் கோப் குழு ஆகியவற்றிற்கு சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் ஊடாக செரன்டிபிட்டி என்ற இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பாரிய தொகை பணம் மற்றும் அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய இந்திய பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட அதிஉச்ச சலுகைகள் மற்றும் பணம் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கத்திற்கு இந்தியாவின் திருச்சி – முசரி பகுதியில் இரண்டு சொந்த வர்த்தக கட்டிடங்கள் இருப்பதாகவும் அவர் அதனை கூலிக்கு வழங்கியிருப்பதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர் ஒருவர் எமக்குத் தெரிவித்தார். அத்துடன் நுவரெலியா மூன்பிளேன், கொட்டக்கலை ரொசிட்டா பகுதிகளில் முத்து சிவலிங்கத்திற்கு ஏக்கர் கணக்கில் காணிகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்விதம் சொத்து சேர்ப்பதற்கு அவருக்கு பணம் எங்கிருந்து கிடைத்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து அண்மையில் மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றில் உரை நிகழ்த்தினார். அதன்பின்னர் அதற்கு மறுப்பு தெரிவித்து ஆறுமுகன் தமது மாகாண சபை உறுப்பினர் கனபதி கணகராஜ் மூலம் பதில் அளித்த போதும் தமிழ் ஊடகங்கள் அதனை பெரியளவில் செய்தியாக்கவில்லை. மோசடி குற்றச்சாட்டு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் ராமநாதன் இதுவரை வாய் திறக்கவில்லை. இந்நிலையிலேயே விசாரணைகள் முடக்கிவிடப்படவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

தகவல் – LNW