முரளிதரன் புதிய சாதனை! ஐசிசி “ஹால் ஆப் பேம்” வரிசையில்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


முரளிதரன் புதிய சாதனை! ஐசிசி “ஹால் ஆப் பேம்” வரிசையில்

ஐசிசியின் “ஹால் ஆப் ஃபேம்” வரிசையில் இலங்கை சுழற்பந்து வீசசாளர் முத்தையா முரளிதரன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள முதல் இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன்தான்.

மேலும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே தமிழரும் இவர்தான்.

முரளிதரனை ஹால் ஆப் ஃபேமில் இணைப்பதாக ஐசிசி இன்று அறிவித்தது. அவர் தவிர மேலும் 3 கிரிக்கெட் ஜாம்பவான்களும் இப்பட்டியலில் இணைந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் ஆர்த்தர் மோரிஸ், கரேன் ரோல்டன் மற்றும் இங்கிலாந்தின் ஜார்ஜ் லோஹ்மான் ஆகியோர் மற்ற மூவர்.

இதில் கரேன் ரோல்டன், 1997 மற்றும் 2005 ஆகிய இரு மகளிர் உலகக் கோப்பைகளை ஆஸ்திரேலியாவுக்கு வென்று கொடுத்தவர் ஆவார்.

இவர்களுக்கு விரைவில் நடைபெறவுள்ள விழாவில் கெளரவப்படுத்தவுள்ள ஐசிசி, ஹால் ஆப் ஃபேம் தொப்பியையும் பரிசாக அளிக்கும்.

இந்த நிகழ்ச்சியில் லோஹ்மான் மற்றும் மோரிஸ் சார்பாக அவர்களது குடும்பத்தினர் கலந்து கொள்வார்கள் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.

முத்தையா முரளிதரன் டெஸ்ட் விக்கெட்டில் பந்து வீச்சில் சாதனை படைத்தவர் ஆவார்.

டெஸ்ட் கிரி்கெட்டில் 800 விக்கெட்களை அவர் வீழ்த்தியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் இவர் வீழ்த்திய விக்கெட்கள் 534 ஆகும். டி20 போட்டிகளில் 12 விக்கெட்களைச் சாய்த்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 22 முறை பத்து விக்கெட்களையும், 67 முறை 5 விக்கெட்களையும் வீழ்த்திய ஜாம்பவான் முரளிதரன்.

இவர் அணியில் இருந்த காலம், இலங்கை கிரிக்கெட்டின் பொற்காலமாகும்.

1993ம் ஆண்டு முதல் 2011 வரை இலங்கை அணி இவரால் பெரும் பலன் அடைந்தது.

குறிப்பாக 1996ம் ஆண்டு இலங்கை அணி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

மேலும் 2002ல் இந்தியாவுடன் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியையும் பகிர்ந்து கொண்டது.

லோஹ்மான், ஒரு சுழற்பந்து வீச்சாளர் ஆவார். ஐசிசி ஹால் ஆப் ஃபேம் பட்டியலில் இடம் பெறும் 27வது இங்கிலாந்து வீரர் ஆவார்.

18 டெஸ்ட் போட்டிகளில் 112 விக்கெட்களை இவர் வீழ்த்தியுள்ளார். காச நோயால் அவதிப்பட்ட இவர் 1901ம் ஆண்டு தனது 36வது வயதில் மரணமடைந்தார்.

இடது கை பேட்ஸ்மேனான ஆஸ்திரேலியாவின் மோரிஸ் 40களில் சிறந்த வீரராக வலம் வந்தவர். 12 சதம், 12 அரை சதங்களை 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி போட்டுள்ளார்.

ஐசிசி ஹால் ஆப் ஃபேமில் இடம் பெறும் 22வது ஆஸ்திரேலிய வீரர் இவர். 1948ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது டான் பிராட்மேன் டக் அவுட் ஆனார்.

அப்போது மறு முனையில் அவருடன் ஆடிக் கொண்டிருந்தவர் மோரிஸ். அப்போட்டியில் மோரிஸ் 196 ரன்களைக் குவித்தார். இரு முறை ஆஸ்திரேலியாவின் கேப்டனாக நியமிக்கப்பட்டவர் மோரிஸ்.

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட்டில் முக்கியமானவர் ரோல்டன். 2005 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்து தனது அணிக்கு கோப்பையை பெற்றுத் தர காரணமாக இருந்தார்.

ஹால் ஆப் ஃபேம் கெளரவத்தில் இணையும் 6வது வீராங்கனை மற்றும் 3வது ஆஸ்திரேலியா வீராங்கனை ரோல்டன். ரோல்டன் 14 டெஸ்ட், 141 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார்