மைத்திரியின் வலையில் சிக்குண்டதா மஹிந்த அணி?.அதிர்ச்சியில் பசில்.

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மைத்திரியின் வலையில் சிக்குண்டதா மஹிந்த அணி?.அதிர்ச்சியில் பசில்.

இலங்கையின் சமகால அரசியல் களத்தில் மைத்திரி – மஹிந்த அணிக்கிடையிலான மோதல் பூதாகரமாகியுள்ள நிலையில், அது இன்னொரு ஆட்சி மாற்றத்திற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இரண்டாக பிளவுபட்டுள்ள உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி என்ற பெயரில் தனித்து செயற்படத் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த சுதந்திர கட்சியின் தலைவர் என்ற ரீதியில் மைத்திரியால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதும் எந்தவிதமான சாதகமான பலன்களும் ஏற்படவில்லை.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மோதலை தவிர்த்துக் கொள்ள கூட்டு எதிர்க்கட்சியினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட மஹிந்த தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டு எதிர்க்கட்சியினரின் ஆதரவுடன், புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் முனைப்பில் பசில் ராஜபக்ஷ செயற்பட்டு வருகின்றார். இது பல சிரேஷ்ட தலைவருக்கு அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பசிலின் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்காமல் இருப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சியின் புலனாய்வு சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் கடந்த வாரம் தலவத்துகொட ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

இந்த கலந்துரையாடலுக்காக பேராசிரியர் தயான் ஜயதிலக, லக்சிறி குணருவன், பேராசிரியர் ரஞ்சித் பண்டார, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, பேராசிரியர் சுமனசிறி லியனகே உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

எப்படியிருப்பினும் இந்த கலந்துரையாடலின் போது அவசியமாக இருப்பது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் என தயான் ஜயதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.

தொகுதி அமைப்பை தயாரித்து கட்சி ஒன்றை உருவாக்கி அந்த கட்சியின் தலைமை பதவியை பெற்றுகொள்ளவதற்கே பசில் ராஜபக்ச முயற்சித்து கொண்டிருப்பதாகவும், இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடுமையான மோதலை ஏற்படுத்தும் என இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் கூட்டு எதிர்க்கட்சியினால் முன்னர் திட்டமிடப்பட்டிருந்த மே தின பேரணியையும் நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு எந்த முறையிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு இடையிலான கூட்டு அரசாங்க ஒப்பந்தத்தை உடைக்காமல் இருப்பதற்கும், அதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்று தொடர்பில் குறித்த ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னரே கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அது வரையில் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுடன் நட்புறவுடன் செயற்பட வேண்டும் எனவும், கூட்டு அரசாங்கத்தின் காலம் நிறைவடையும் இறுதி சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஒரு தீர்மானத்திற்கு வந்துவிடுவார் என்பதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்புவது இலகுவாக இருக்கும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

எப்படியிருப்பினும் இதுவரையில் மஹிந்த தரப்பினர் மற்றும் மைத்திரி தரப்பினர் அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.

அண்மையில் ஹைட் மைதானத்தில் இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.