மைத்திரி – ரணில் நீதிமன்றம் செல்ல நேரிடுமா?

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


மைத்திரி – ரணில் நீதிமன்றம் செல்ல நேரிடுமா?

போலி ஆவணம் தயாரித்தமை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு முறைப்பாட்டின் முதல் சாட்சியாளராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இரண்டாவது சாட்சியாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சட்டமா அதிபரினால் பெயரிடப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கினை எதிர்வரும் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன அறிவித்துள்ளார். அத்துடன் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் முதல் அறிக்கையை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்குமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

03 கடுமையான குற்றச்சாட்டின் கீழ் சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கின் குற்றவாளியாக திஸ்ஸ அத்தநாயக்க முதியன்ஸலாகே குடாபண்டா திஸ்ஸ அத்தநாயக்க பெயரிடப்பட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியில் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கையெழுத்துக்களை போலியாக இட்ட ஆவணம் ஒன்றை, ஊடகங்களுக்கு வழங்கியமை உட்பட மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபர் இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கிற்காக ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவரும் உள்ளிட்டுள்ளதாக கூறப்படும் ஒப்பந்தம் உட்பட 5 வழக்கு பொருட்களை சட்டமாக அதிபர் வழக்கில் சேர்த்துள்ளார்.

வழக்கு முறைப்பாட்டின் சாட்சியாளர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட 15 பேரின் பெயர்கள் உள்ளடக்கிய ஆவணம் ஒன்று சட்டமா அதிபரினால் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.