யாழ் பல்கலை மாணவர்களின் உயிரிழப்பு கொலையா? 05 பொலிஸார் கைது; விசாரணைகள் தீவிரம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


யாழ் பல்கலை மாணவர்களின் உயிரிழப்பு கொலையா? 05 பொலிஸார் கைது; விசாரணைகள் தீவிரம்

யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட மாணவர்களில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எழுந்துள்ள சந்தேகத்தில் ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த சுகந்தராசா சுலக்சன் (வயது 24) மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23) ஆகிய இரு மாணவர்கள் உயிரிழந்தனர்.

குறித்த இருவரும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் 03ம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார்கள்.

இவர்கள் இருவரும் விபத்தில் உயிரிழக்கவில்லை என்றும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிலேயே உயிரிழந்துள்ளனர் என்றும் சந்தேகம் எழுந்திருந்த நிலையிலேயே 05 பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) ஆரம்பித்துள்ளதாகவும் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக பதவி இடை நீக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் வைத்தியசாலை வளாகத்தில் ஒன்றுகூடி உள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

இதன்போது அங்கு விஜயம் செய்திருந்த மாவை சேனாதிராஜாவை சூழ்ந்து கொண்ட மாணவர்கள், இது விபத்து அல்ல என்றும், இரு இளைஞர்களினதும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதற்கு சரியான விசாரணை இடம்பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு மாணவர்களில் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட விபத்திலேயே இரு மாணவர்களும் உயிரிழந்திருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை கூறத்தக்கது.