ரணிலிடம் மன்றாடிய மஹிந்த! மீண்டும் நாமல் தப்புவாரா?

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ரணிலிடம் மன்றாடிய மஹிந்த! மீண்டும் நாமல் தப்புவாரா?

நிதி தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைக்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 6 பேரை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யுமாறு கடந்த 28ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு உத்தரவிட்ட போதிலும், இன்றுவரை நாமலை கைது செய்ய நிதி மோசடி விசாரணை பிரிவு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இதற்கான காரணம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளே எனத் தெரிய வந்துள்ளது.

தற்போது தென் கொரியாவுக்கான விஜயத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளார். கொரியாவுக்கான விஜயத்திற்கு முன்னர் பிரதமருடன் தொடர்பு கொண்ட மஹிந்த, தான் நாடு திரும்பும் வரையில் நாமலை கைது செய்ய வேண்டாம் என கோரியுள்ளார்.

அதற்கமைய மஹிந்த ராஜபக்ச தனது கொரிய விஜயம் நிறைவடைந்து வரும் வரையில் நீதிமன்ற உத்தரவினை செயற்படுத்த வேண்டாம் என பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைவாக மஹிந்த ராஜபக்ச நாடு திரும்பும் வரையில் நாமல் ராஜபக்சவை கைது செய்யும் நடவடிக்கை தாமதமாக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்திலும் இவ்வாறு கைது செய்யப்படவிருந்த நபர்களின் கைதை தடுப்பதற்காக நல்லாட்சி அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவின் நடவடிக்கையில் தலையிட்டுள்ளனர்.

இதன் காரணமாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் தங்கள் கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியாமை குறித்து வருத்தத்துடன் இருப்பதாக தெரியவந்துள்ளது