ரஷ்ய ஏரோப்லோட் விமானம் ஒன்று வெறுமையாக வந்து, இலங்கையில் இருந்து ரஷ்யர்களை ஏற்றிச் சென்றுள்ளது.
கடந்த வாரத்தில் நீதிமன்ற ஆணையின்படி, ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த செயற்பாட்டுக்கு ரஷ்ய அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. பிரச்சினையை உடனடியாக தீர்க்குமாறும் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
எனினும் இந்த பிரச்சினை, தனிப்பட்ட வர்த்தகம் தொடர்பான பிரச்சினை என்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினை இல்லை என்றும் இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் வழக்கு விசாரணையை துரிதமாக்குமாறு அவர் நீதியமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், தமது அதிருப்தியை வெளியிடும் முகமாக, ரஷ்யாவின் ஏரோப்லோட் விமான நிறுவனம், இலங்கைக்கான தமது சேவைகளை நிறுத்திக்கொண்டது.
இதனையடுத்தே இன்று காலை பயணிகள் இன்றி கட்டுநாயக்கவுக்கு வந்த ஏரோலோப்ட் விமானம், விமான நிலையத்தில் இருந்து 275 ரஷ்யர்களை ஏற்றிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டு்ள்ளது.
ரஷ்ய அரசாங்கத்தின் பணிப்பின்பேரிலேயே இலங்கைக்கு வந்திருந்த ரஷ்யர்கள், மீண்டும் நாட்டுக்கு அழைத்துச்செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.