வடக்கில் கொள்ளையிடப்பட்ட பெருந் தொகை தங்க நகைகளுடன் இருவர் கைது

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


வடக்கில் கொள்ளையிடப்பட்ட பெருந் தொகை தங்க நகைகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு இடங்களில் கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும், சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் இது தொடர்பில் இரு சந்தேகநபர்களையும் கைதுசெய்துள்ளதாக, யாழ் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஜீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் கொள்ளை உட்பட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தொடர்ச்சியாக கண்காணித்து வந்ததன் அடிப்படையில், கடந்த 11ம் திகதி சந்தேகத்தின் பேரில் கார் ஒன்றை சோதனையிட்ட போது, அவற்றில் கொள்ளையிடப்பட்ட நகைகள் சில காணப்பட்டன.

இதனையடுத்து, சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதோடு, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேலும் பல நகைகளும் மீட்கப்பட்டிருந்தன.

இந்த நகைகள் கடைகளில் விற்கப்பட்டிருந்ததாகவும், கொழும்பு வரை சென்று அவற்றை மீட்டிருந்ததாகவும் அவற்றில் பல நகைகள் உருக்கப்பட்ட நிலையில் கட்டிகளாக காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் மோசடியான வகையில் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட வங்கி கணக்கு புத்தகங்கள் நான்கையும் கைப்பற்றியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, இது குறித்து தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பலனாக நேற்று மேலும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்தனர்.

அத்துடன், மீட்கப்பட்ட நகைகள் மொத்தம் 128 பவுண்கள் எனவும் அவற்றின் மொத்த பெறுமதி சுமார் 70 இலட்சத்திற்கும் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக் கைது நடவடிக்கையினால் மேலும் பல கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பான விசாரனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்த யாழ் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஜீவ தர்மரட்ண, சந்தேகநபர்களை கைப்பற்றப்பட்ட நகைகளுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.