வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைக்கும் யோசனை வடமாகாண சபையில் நிறைவேற்றம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைக்கும் யோசனை வடமாகாண சபையில் நிறைவேற்றம்

வடக்கு மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வு திட்ட யோசனை இன்று வெள்ளிக்கிழமை 19 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்கான கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்ற நிலையில், வடக்கு மாகாண சபையும், புதிய அரசியலமைப்பு கருத்துக்களை முன்வைப்பதற்காக வடக்கு மாகாண முதலமைச்சரின் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவினர் மூன்று உப பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அரசியல் தீர்வு திட்ட யோசனை தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

வரலாறு, அரசியல் ரீதியான விடயங்கள் மற்றும் அதிகார பகிர்வு தொடர்பான மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தது.

அந்த குழுக்களினால் முன்வைக்கப்பட்ட தீர்வு திட்ட யோசனை வரைபு கடந்த 07 ஆம் திகதி வடமகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை வடமாகாண சபையின் அரசியலமைப்பு தீர்வு திட்ட யோசனையின் விசேட அமர்வு நடைபெற்று, அரசியலமைப்பு தீர்வு திட்ட யோசனையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களில் மாற்றம் செய்ய வேண்டிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு, மாற்றங்கள் இடம்பெற்றன.

அந்த வகையில் 13வது திருத்த்திற்கு அப்பால், சம்ஷ்டி அடிப்படையிலான தீர்வு இருக்க வேண்டுமென்றும், மாநில சுயாட்சியை மையமாக வைத்தே அதிகார பகிர்வுகள் வழங்கப்பட வேண்டுமென்றும் அரசியல் தீர்வு திட்ட யோசனையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தீர்வு திட்ட யோசனை மீதான விவாதம் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நீடித்திருந்ததுடன், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தமது கருத்துக்களை சபையில் முன்வைத்தனர்.

சபை ஆரம்பிக்கப்பட்ட போது, இருந்த உறுப்பினர்கள், சபையின் அமர்வில் நடுப்பகுதிகளில் வெளிநடப்புச் செய்தனர்.

கடும் இழுபறிகளுக்கு மத்தியில், விவாதங்கள் நடைபெற்று, பின்னர் 19 உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்துடன், அரசியலமைப்பு தீர்வு திட்ட யோசனை ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்வு திட்ட யோசனை வாக்கெடுப்பின் போது சபையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 17 பேரும், எதிர்கட்சியில் 2 உறுப்பினர்களும் இருந்தனர்.

நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு தீர்வு திட்ட யோசனை எதிர்வரும் 30 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கையின் எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா.சம்பந்தனிடம், யாழ். பொது நூலகத்தில்வைத்து கையளித்த பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும், பாராளுமன்றத்தின் சபாநாயகருக்கும் அனுப்பி வைக்கப்படுமென்றும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம், மன்றில் அறிவித்தார்.