ஐக்கிய மக்கள் சக்தியின் சகல பொறுப்புகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மீண்டும் ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பசறை, லுணுகலை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் இந்த முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் இணைந்து கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
அண்மையில், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், மடுல்சீமை பகுதியில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்று நடைபெறவிருந்தது.
எனினும், திடீர் சுகயீனம் காரணமாக, அந்த கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் என எதிர்கட்சித் தலைவர் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், அன்றைய தினம் வெலிமடை பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் பங்கேற்றிருந்தார்.
இதனையடுத்து, எதிர்கட்சித் தலைவர் மீதான அதிருப்தி காரணமாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட அமைப்பாளர் மற்றும் கட்சியின் சகல பதவி நிலைகளில் இருந்தும் விலகுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அறிவித்தார்.
எவ்வாறாயினும், உள்ளூராட்சிமன்றத் தேர்தல் காலப்பகுதி என்பதால், அவர் மீண்டும் அந்த பொறுப்புகளை ஏற்க வேண்டும் என குறித்த பிரதேச சபை உறுப்பினர்களும், வேட்பாளர்களும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.