இலங்கை விமான சேவைகள் இடைநிறுத்தப்படுமா?


இலங்கை விமான சேவைகள் இடைநிறுத்தப்படுமா?

டொலர்களில் கட்டணம் செலுத்தவில்லை என்றால் விமானங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாதென எரிசக்தி அமைச்சு, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த வாரம் அமைச்சு தனது முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்ததாகவும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அதன் அரச வங்கி வலையமைப்பின் ஊடாக டொலர்களை செலுத்துமாறு தேசிய விமான சேவைகள் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியதாகவும் எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் கே.டி.ஆர் ஒல்கா தெரிவித்துள்ளார்.

விமானங்களுக்கு எரிபொருளை வழங்க வேண்டும் என்றால் எங்களுக்கு டொலர்கள் தேவை. இதுகுறித்து விமான நிறுவனத்திடம் நீண்ட நாட்களாக கூறி வருகிறோம். ஆனால் கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக அறிவித்தோம்.

விமான நிறுவனம் டொலர்களை சம்பாதிக்கிறது. எனவே அரச வங்கி கட்டமைப்பிற்கு டொலர்களை அனுப்ப வேண்டும் என விமான நிறுவனத்திடம் கூறினோம்.

விமான சேவைகள் மற்றும் இலங்கை மின்சார சபை போன்ற பல அரச நிறுவனங்கள் தொடர்ந்தும் கடனில் எரிபொருளை கொள்வனவு செய்வதாகவும் இதனால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிதி சுமை அதிகரித்து வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

40,000 மெற்றிக் தொன் விமான எரிபொருளை ஏற்றிச் வரும் கப்பல் ஒரு வாரத்திற்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளதுடன், ஜனவரி 20 ஆம் திகதி வரை மாத்திரமே தேவையை பூர்த்தி செய்ய எரிபொருள் கையிருப்பு போதுமானதாக இருக்கும் என இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் சுத்திகரிப்புக்கான கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் ஜனவரி 3ஆம் திகதி முதல் மூடப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வரலாற்றில் முதல் தடவையாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரை மூடப்பட்டிருந்தது.

இது குறித்து ஒல்காவிடம் ​​ஜனவரி 25ம் திகதிக்கு பிறகு ஒரு தொகை கச்சா எண்ணெய் இலங்கைக்கு வர உள்ளதாகவும், அதுவரை சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டிய நிலை வரலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.