ஜேர்மனியின் ஃபிராங்ஃபர்ட் (frankfurt) நகரில் உள்ள துணைத் தூதரகம் மற்றும் சைப்ரஸிலுள்ள துணைத் தூதரகம் என்பவற்றை மூடுவதற்கு வெளிவிவகார அமைச்சு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிவிவகார அமைச்சு உயர் அதிகாரி ஒருவரிடம் நாம் இது தொடர்பில் வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் நைஜீரியாவில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அலுவலகங்களை நிர்வகிக்க ஏற்படும் செலவினங்களை குறைப்பதற்காகவே, ஐரோப்பிய நாடுகளில் உள்ள இரு துணைத் தூதரகங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், நைஜீரியாவில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே அங்குள்ள தூதரகத்தை மூட தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களின் பராமரிப்பு மற்றும் பணியாளர்களின் கொடுப்பனவு செலவுகள், 11 பில்லியன் ரூபாவை தாண்டும் என 2021 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.