110 கோடி பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது; பல முக்கிய தகவல்கள் அம்பலம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


110 கோடி பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது; பல முக்கிய தகவல்கள் அம்பலம்

இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் 11 வெளிநாட்டவர்களுடன் கைப்பற்றப்பட்ட 101 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி 11,000 இலட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனைக் கூறினார்.

போதைப் பொருளை கடத்தி வந்த சிறிய படகு ஈரான் நாட்டிற்கு சொந்தமானது என்றும் இந்தக் கடத்தலை செய்திருக்கின்ற பிரதான சூத்திரதாரிகள் நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய பிரதேசத்தில் தங்கியிருந்த குழுவொன்று என்றும் ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட 11 வெளிநாட்டு பிரஜைகளும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரின் பொறுப்பில் இருப்பதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் 11 வெளிநாட்டவர்களுடன் கைப்பற்றப்பட்ட 101 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள், தெற்கு அதிவேக வீதி வழியாக கொழும்புக்கு எடுத்து வர திட்டமிடப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

கடந்த 30ம் திகதி ஹெரோயின் போதைப் பொருள் தொகையுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளில் பல முக்கிய தகவல்களும் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் குறித்து இலங்கை கடற்படையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சமீபத்திய வரலாற்றில் கடற்பகுதியில் கைப்பற்றப்பட்ட பாரியளவான போதைப்பொருள் இவையாகும்.

மிகப் பாரியளவிலான இந்த போதைப் பொருள் கடத்தலில் இலங்கையை சேர்ந்தவர்களுடன் இணைந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பிரஜைகள் ஈடுபட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து இலங்கையின் தென் கடற் பகுதிக்கு எடுத்து வரப்படும் இந்த ஹெரோயின், தென்பகுதியில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவது போல் உள்ள இலங்கை பிரதிநிதிகளின் படகுகள் மூலம் நாட்டுக்குள் கடத்தி வரப்படுவதாக தெரியவந்துள்ளது.

பின்னர் தெற்கு அதிவேக வீதியின் ஊடாக கொழும்புக்கு கொண்டு வரப்படும் ஹெரோயின் கொழும்பில் வைத்து, பிரதான விற்பனையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த ஹெரோயின் விற்பனையானது மிகப் பெரியளவில் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

தகவல் – அத தெரண