15 வருடங்களாக ராஜபக்ஸவினருடன் வைத்திருந்த தொடர்புகள் இன்றுடன் முடிவுக்கு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இன்று(01) தெரிவித்தார்.
கொட்டகலையில் நடைபெற்ற மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு ஜீவன் தொண்டமான் இதனைக் கூறினார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் இன்று நடைபெற்றது.
ஓரணியில் திரள்வோம், ஒற்றுமையாக இருப்போம், உரிமைகளை வெல்வோம். மீண்டெழுவோம் என தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், நாய்கள் குரைக்கும்போது சிங்கங்கள் அஞ்சுவது கிடையாது எனவும் சூளுரைத்தார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் மக்கள் பக்கம் நின்றே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிவெடுத்தது. ஆனால் எமது சமூகத்தை காட்டிக்கொடுக்கும் விதத்தில் ஒரு சிலர் செயற்படுவதால் தலைகுனிந்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நான் பதவிக்காக அரசியல் செய்பவன் அல்லன். மக்களுக்கானதே எனது அரசியல் பயணம். அதனால்தான் ராஜபக்ச அரசாங்கத்துடனான உறவை முறித்துக்கொண்டு, இன்று மக்கள் பக்கம் நிற்கின்றோம். அப்படி இருந்தும் வரலாறு தெரியாத சிலர், காங்கிரஸை விமர்சித்து வருகின்றனர் என்றார்.