அப்ரிடி ஓய்வு

தமிழ் ​செய்திகள் இன்று


அப்ரிடி ஓய்வு

பாகிஸ்தான் சகலதுறை வீரரான சஹிட் அப்ரிடி (36) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து கடந்த 2010இல் ஓய்வு பெற்றுவிட்ட அப்ரிடி ஒரு நாள் போட்டிகளிலிருந்து 2015ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். கடந்த ஆண்டு டி20 போட்டிகளின் தலைமை பதவியிலிருந்து விலகியிருந்தார்.

இந்நிலையில் தனது 21 வருட சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்து கொள்வதாக அவர் அறிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக 37 பந்துகளில் சதமடித்த அப்ரிடியை ‘புூம் புூம’ என்ற புனைப்பெயரில் ரசிகர்கள் அழைப்பதுண்டு.

பாகிஸ்தான் அணிக்காக 98 டி20 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 1,405 ஓட்டங்கள் மற்றும் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் உள்ளுர் கிரிக்கெட் தொடர்களில் அடுத்த 2 ஆண்டுகள் விளையாடத் திட்டமிட்டுள்ளதாக அப்ரிடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “சர்வதேச கிரிக்கெட்டுக்கு நான் விடைகொடுத்துவிட்டேன். என்னுடைய ரசிகர்களுக்காக நான் விளையாடிக் கொண்டிருக்கிறேன். அடுத்த இரண்டு வருடங்களுக்கு பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாடுவேன். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன்.

இப்போது என்னுடைய அறக்கட்டளை மிகவும் முக்கியமாக இருக்கிறது. என்னுடைய நாட்டுக்காக சிறப்பாகவும், தீவிரமாகவும், உரிய முறையிலும் விளையாடினேன்” என்று தெரிவித்துள்ளார்.