ஜெயசங்கரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கை

தமிழ் ​செய்திகள் இன்று


ஜெயசங்கரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கை

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெய்சங்கரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துள்ளனர்.

கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர்களாகிய மாவை சேனாதிராஜா, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித் சிங் சந்து, துணைச் செயலாளர் மற்றும் தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என பிபிசி செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இச் சந்திப்பின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடி பிரச்சினைகளான, வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுப்பில் உள்ள மந்த நிலைமை, காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில் வெளியுறவு செயலரை தெளிவுபடுத்திய கூட்டமைப்பினர், புதிய அரசியல் யாப்பு உருவாக்கமானது தற்போது ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை தொடர்பில் தமது கரிசனையையும் வௌியிட்டுள்ளனர்.

இந்த விடயங்கள் குறித்து இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான தனது சந்திப்பின் போது எடுத்துரைப்பதாக இந்திய வெளியுறவு செயலாளர், கூட்டமைப்பினருக்கு உறுதியளித்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.