திடீர் சுற்றிவளைபின் போது அதிக விலைக்கு அரிசியினை விற்பனை செய்த 52 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தமிழ் ​செய்திகள் இன்று


திடீர் சுற்றிவளைபின் போது அதிக விலைக்கு அரிசியினை விற்பனை செய்த 52 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அரிசியை அதிக விலையில் விற்பனை 52 வியாபாரிகள் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளின் சுற்றிவளைப்பில் இனம்காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் 137 வர்த்தக நிலையங்களை அதிகார சபை அதிகாரிகளின் சுற்றிவளைத்தனர். இதன்போதே குறித்த 52 வியாபாரிகள் இனம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 13 வியாபாரிகளும், கண்டியில் 12 வியாபாரிகளும், குருநாகலில் 10 வியாபாரிகளும், அநுராதபுரத்தில் 8 வியாபாரிகளும், வவுனியாவில் 7 வியாபாரிகளும், பொலநறுவை மற்றும் கேகாலையில் 6 வியாபாரிகளும் இந்த சுற்றிவளைப்பின் போது இனம்காணப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்குக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையிலும் சில வியாபார நிலையங்கள் குறிப்பாக முற்றுகையிடப்பட்டதாகக் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணை அதிகாரிகள், தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உத்தரவிட்டுள்ளார்.

சனி, ஞாயிறு மற்றும் போயா தினங்களிலும் விடுமுறைகள் என்று பாராது கடமையில் ஈடுபட்டு பாவனையாளர்களின் நன்மை கருதி செயற்படுமாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் மோசடியில் ஈடுபடும் வர்த்தகர்களுக்குக் கடுமையான தண்டனைப் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்