பிரதமரின் அதிகாரங்களை அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்ப்பதாக வாசுதேவநாணயக்கார எம். பி தெரிவிப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


பிரதமரின் அதிகாரங்களை அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்ப்பதாக வாசுதேவநாணயக்கார எம். பி தெரிவிப்பு

கொள்கை ரீதியில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு வழங்கினாலும் பிரதமரின் அதிகாரங்களை அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்ப்பதாக ஜனநாயக இடதுசாரி முன்னணி செயலாளர் வாசுதேவநாணயக்கார எம். பி தெரிவித்தார்.

பொரளை என். எம். பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று(20) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:-

ஜனாதிபதி, பிரதமர் ஆகிய பதவிகளிடையே அதிகாரத்தை பகிர்வது உகந்ததல்ல. தற்போதைய நிலையில் இதே போன்று நீடிப்பதே உகந்தது.

நாட்டு வளங்களை விற்பதற்கு எதிராகவே நாம் நீதிமன்றம் சென்றாலும் 10 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்குதற்கு எதிராக நீதிமன்றம் சென்றதாகப் பிரதமர் தெரிவிக்கும் குற்றச்சாட்டு தவறானது.

10 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதற்காக மேலும் 10 ஆயிரம் பேரின் காணிகளை பறிப்பதை அனுமதிக்க முடியாது. எதிர்ப்பு போராட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட பிரதமர் தயாராகிறார். ஹம்பாந்தோட்டையில் இந்த நிலைமையைக் கண்டோம் என்றோர்.

சமசமாஜக்கட்சி தலைவர் திஸ்ஸ விதாரண கூறியதாவது-:

கடந்த அரசு பெற்ற கடன்களினாலே நாடு நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளதாக குற்றஞ் சுமத்தப்படுகிறது. ஆனால் இந்த அரசு கடன் பெறுவது இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. அவரின் வரிக்கொள்கைகளினால் நாட்டின் நிலை மோசமடைந்துள்ளது. தகைமையற்ற மருத்துவர்களை உருவாக்க இடமளிக்க முடியாது. மருத்துவ சபையின் நடவடிக்கைகளில் பிறர் தலையிட இடமளிக்கக் கூடாது என்றார்