ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விஷேட பணிப்புரை

தமிழ் ​செய்திகள் இன்று


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விஷேட பணிப்புரை

வெளிநாடுகளில் இருந்து வருகை தருவோரை PCR பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் முடிவுகளை விமான நிலைய வளாகத்திலேயே பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குடிவரவு நடைமுறைகளுக்கு முன்னர், பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை தனியான ஒரு இடத்திற்கு அனுப்பி அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

கொவிட் 19 ஒழிப்பு விசேட செயலணி மற்றும் விசேட வைத்திய நிபுணர்களுடன் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இந்த பணிப்புரையை விடுத்தார்.

வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக மத்திய கிழக்கில் இருந்து நாட்டுக்கு வருவோர்களை PCR பரிசோதனைக்கு உட்படுத்தும் போதும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் போதும் முகம்கொடுக்கவேண்டியுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான வழிகள் குறித்து இன்றைய கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டது.

PCR முடிவுகளை பெற்றுக்கொள்வதை விரைவுபடுத்துவதற்கு விமான நிலைய வளாகத்திலேயே பரிசோதனைக் கூடமொன்றை தாபிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. நோய்த்தொற்று நீண்ட காலம் இருக்க முடியும் என்பதாலும் அதனைத் தொடர்ந்தும் விமான நிலைய வளாகத்தில் பரிசோதனைக் கூடமொன்று இருப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளில் இருந்து வருகைதருவோரை குறித்த நாடுகளிலேயே பரிசோதனைக்கு உட்படுத்துதல், அதனை அரசாங்கத்தின் நேரடி தலையீட்டில் அல்லது குறித்து நாடுகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளை கண்டறியவும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு முன்கூட்டியே நோய்த்தொற்றுடையவர்களை கண்டறிவதன் மூலம் வைத்தியசாலைகளுக்கு அனுப்பும் போதும் தனிமைப்படுத்தலின் போதும் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை குறைக்க முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

தாய்நாட்டுக்கு வருகைதர எதிர்பார்த்துள்ள அனைவருக்கும் கூடிய விரைவில் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) விசேட வைத்திய நிபுணர் சஞ்சீவ முனசிங்க ஆகியோரும், முப்படை தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட செயலணி உறுப்பினர்களும் விசேட வைத்திய நிபுணர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

மொஹான் கருணாரத்ன
பிரதிப் பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.06.04