தர்காநகர் சிறுவன் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

தமிழ் ​செய்திகள் இன்று


தர்காநகர் சிறுவன் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

அளுத்கம தர்காநகர் பிரதேசத்தில் முஸ்லிம் சிறுவன் ஒருவர் பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை அரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அளுத்கம – தர்கா நகர் பகுதியில் ஒஸ்டிசம் குறைப்பாடுடைய 14 வயதான சிறுவர் ஒருவர் காவற்துறையினரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

நோன்பு பெருனாள் தினத்தன்று மிதிவண்டியில் பயணித்த வேளையில் அவர் காவற்துறை சோதனை சாவடி ஒன்றில் வைத்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான CCTV காணொளி பதிவுகளும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இதற்கு குமார் சங்கக்கார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதே நேரம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

அலுத்கம காவற்துறையின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார்.

களுத்துறை காவற்துறை பிரிவின் உயர் அதிகாரி கொண்ட குழுவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 25 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் குறித்த சிறுவன் துவிச்சக்கர வண்டியில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த சிறுவனை காவற்துறையினர் சுற்றிவளைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

அதன்பின்னர் குறித்த சிறுவனின் தந்தைக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அந்த சிறுவன் ஒஸ்டிசம் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான காணொளி சமூகவளைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளதாகவும் அலுத்கம காவற்துறையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.