ஜீவன் தொண்டமானின் பெயர் இன்றி வௌியான வர்த்தமானி

தமிழ் ​செய்திகள் இன்று


ஜீவன் தொண்டமானின் பெயர் இன்றி வௌியான வர்த்தமானி

நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் போட்டியிடும், ஜீவன் தொண்டமானின் பெயர் அடங்கிய திருத்தப்பட்ட வர்த்தமானி விரைவில் வெளியாக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களைக் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டது.

நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிட இருந்த ஆறுமுகன் தொண்டமான் காலமானதை அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவரின் புதல்வன் ஜீவன் தொண்டமானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும், இன்றைய தினம் வெளியிடப்பட்ட வேட்பாளர்களின் விருப்பு இலக்கங ;களைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தலில் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பெயரே உள்ளடக்கப்பட்டிருந்தது.

இது குறித்து எமது செய்தி சேவை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான ரட்ணஜீவன் ஹூலை தொடர்பு கொண்டு வினவியது.

அதற்கு பதிலளித்த அவர், கடந்த மே மாத முற்பகுதியில் இறுதி செய்யப்பட்ட வர்த்தமானி அறிவித்தலே மாற்றங்கள் இன்றி அச்சிடப்பட்டதாக தெரிவித்தார்.

இந்தநிலையில், ஜீவன் தொண்டமானின் பெயர் அடங்கிய திருத்தப்பட்ட வர்த்தமானி விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான ரத்னஜீவன் ஹூல் தெரிவித்தார்.