ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை

தமிழ் ​செய்திகள் இன்று


ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை

சினமன் க்ரேண்ட் குண்டுதாரி இன்ஸாப் அஹமதுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய காரணத்தின் கீழ் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைதுசெய்யப்பட்டாலும், அதற்கு எவ்வித சாட்சியங்களையும் இரகசிய பொலிஸார் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ண பண்டார கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (17) தெரிவித்துள்ளார்.

குறித்த குண்டுதாரியுடன் சட்டத்தரணி ஹிஜாஸ் எவ்வித தொடர்புகளையும் பேணி வரவில்லை. அவர்கள் இருவருக்குமிடையே உள்ள ஒரேயொரு தொடர்பு குறித்த நபரின் சிவில் வழக்குகள் இரண்டின் சட்டத்தரணியாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் செயற்பட்டுள்ளதாகவும், குறித்த வழக்குகள் இரண்டையும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியே அவருக்கு வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ண பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பு சினமன் க்ரோண்ட் ஹோட்டல் குண்டுத்தாக்குதல் தொடர்பான முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் ஆஜராகியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சட்டத்தரணி ஹிஜாஸ் தொடர்ந்தும் தடுப்பு உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த முறைப்பாடு நேற்று (17) கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது, இரகசிய பொலிஸார் சார்பில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே ஆஜராகியுள்ளார்.

அவர் நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும் போது, ‘புத்தளம் மதுரங்குலி மத்ரஸா ஒன்றில் இருந்து தமிழ் மொழி மூலமான 19 புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. அதிலே மூன்று புத்தகங்கள் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. குறித்த மூன்று புத்தகங்களையும் கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையின் பணிப்பாளர் ஊடாக சிறுவர் உளவியல் மருத்துவர் ஒருவரிடம் முன்வைத்து, இந்தப் புத்தகங்களை வாசிப்பதால் அல்லது படிப்பதால் சிறுவர்களின் உள்ளம் வன்முறையை நோக்கிச் செல்கின்றதா? என்பது குறித்து அறிக்கையொன்றைப் பெற நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.’

குறித்த வேண்டுகோளுக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

அதன் பின்னர் சட்டத்தரணி ஹிஜாஸ் சார்பில் நீண்ட நேரம் வாதங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த, எவ்வித சாட்சியங்களும் இல்லாத நிலைமையிலேயே ஹிஜாஸ் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த மேலும் தெரிவித்துள்ளதாவது,

‘ஹிஜாஸ் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார். அந்த சட்டத்தின் மூலம் கைதுசெய்யப்பட்டாலும், அரசியலமைப்பின் விதிவிதானங்களை மீற முடியாது. கைதுசெய்யப்படுவதற்கான காரணத்தை அறிவிக்க வேண்டுமென்றும் கைதுசெய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதனை மீறி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தால் செயற்பட முடியாது. ஹிஜாஸ் கைதுசெய்யப்படும் போது, கைதுக்கான காரணம் கூறப்படவில்லை. அவருக்கெதிரான குற்றச்சாட்டு இன்னும் கூறப்படவில்லை.

இன்ஸாப் அஹமத் என்ற குண்டுதாரிக்கு உதவி ஒத்தாசை வழங்கிய காரணத்தினால் தடுத்து வைக்கப்படுவதாக ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ள தடுப்பு உத்தரவுக்கேற்ப தெரியவருகின்றது. எனினும் அது தொடர்பாக ஒரு சாட்சியேனும் இல்லை. தற்போது விசாரணைகள் நடைபெறுவது அதுகுறித்தல்ல. தற்போது, சிறுவர்களின் உள்ளத்தை குழப்பியதாக குற்றச்சாட்டின் கீழ் விசாரணைகள் நடைபெறுவதாகவே தெரிகின்றது. குண்டுதாரிக்கு உதவி ஒத்தாசை வழங்குவதாயின், குண்டைத் தயாரிக்க அல்லது அந்த இடத்துக்கு எடுத்துச் செல்ல உதவியிருக்க வேண்டும். தற்போது, வேறு விடயங்கள் குறித்தே விசாரணைகள் நடைபெறுகின்றன.

‘சேவ் த பேர்ல்’ என்ற அமைப்பு குறித்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. தொண்டர் நிறுவனமொன்றை பதிவுசெய்ய வேண்டிய தேவையும் இல்லை. இந்த அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர்கள் 20 பேரில் அரச துப்பறியும் சேவையின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரியொருவரும் இருக்கின்றார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவரும் இருக்கின்றார். அரச சேவையில் உள்ளவர்கள் உட்பட பிரபலமானவர்கள் பலரும் அங்கே இருக்கின்றனர். இந்த அமைப்பு பௌத்த பாடசாலைகளுக்கும் உதவி செய்திருக்கின்றன. அடிப்படைவாத அமைப்பொன்றாயின், பௌத்த பாடசாலைகளுக்கு உதவி செய்திருக்காது.

குண்டுதாரியுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டாலும், இன்ஸாபுடன் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. அவருடன் இருந்த ஒரே தொடர்பு சிவில் (இடம்) வழக்குகள் இரண்டின் சட்டத்தரணியாக செயற்பட்டுள்ளமையே ஆகும். அவற்றையும் 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியே ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கியுள்ளார். அலி சப்ரி நடத்திச் சென்ற வழக்குகளையே இவர் தொடர்ந்துள்ளார்.

அவர் கைதுசெய்யப்பட்டதன் பின்னரே, சிறுவர்கள் இருவரை அழைத்துச் சென்று நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது. இரகசிய வாக்குமூலம் என்றாலும், இதுதான் அந்த இரகசிய வாக்குமூலம் என்பது அடுத்த நாள் மௌபிம பத்திரிகைகள் பிரசுரமாகின்றது. நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்ட இரகசிய வாக்குமூலத்தை நீதிமன்றம் முத்திரையிட்டு வைக்கும்போது, அது எவ்வாறு பத்திரிகைகளில் பிரசுரமாவது? அவ்வாறாயின், குறித்த சிறுவர்கள் மேற்கொண்ட இரகசிய வாக்குமூலத்தை வேறு ஒருவர் உருவாக்கியிருக்க வேண்டும்.

தம்மிடம் பலவந்தமாக வாக்குமூலம் பெற்றதாக சிறுவர்கள் மூவரும் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றையும் தாக்கல் செய்துள்ளனர்.

வீரசிங்க எதிராக சட்டமா அதிபர் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கமைய, எதன் கீழ் கைதுசெய்யப்பட்ட ஒருவராக இருந்தாலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். எனவே, குறைந்தபட்சம் சில அவதானிப்புகளுக்காவது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு இரகசிய பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்’.

குறித்த வழக்குத் தீர்ப்பையும் ஆராய்ந்து, ஜூலை மாதம் முதலாம் திகதி தனது தீர்ப்பை வழங்குவதாக நீதவான் தெரிவித்துள்ளார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை சந்தேக நபராக பெயரிடப் போதுமான சாட்சியங்கள் இருக்கின்றதா என நீதவான் இரகசிய பொலிஸாரிடம் கேட்டபோது, போதியளவு சாட்சியங்களை வெளிப்படுத்திக்கொள்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இரகசிய பொலிஸார் சார்பில் ஆஜராகிய பொலிஸ் சார்ஜன்ட் தெரிவித்துள்ளார்.

Medialk