ஈஸ்டர் தாக்குதல் குறித்து பாகிஸ்தானிடமிருந்து எச்சரிக்கை வந்ததா? ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ள விடயம்

தமிழ் ​செய்திகள் இன்று


ஈஸ்டர் தாக்குதல் குறித்து பாகிஸ்தானிடமிருந்து எச்சரிக்கை வந்ததா? ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ள விடயம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானிடமிருந்து எச்சரிக்கை எதுவும் கிடைத்திருக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதித்திட்டம் குறித்து இலங்கைக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்திருந்ததாக இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் முஹம்மது சாத் கட்டாக் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பாகவே முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜயவர்தன வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவில் இருந்து மாத்திரமே தமக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து எச்சரிக்கை கிடைத்திருந்ததாக புலனாய்வுப்பிரிவு தனக்குத் தெரிவித்திருந்ததாக ருவன் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த எச்சரிக்கை தொடர்பில் அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தால் எந்தவொரு பின்தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல பிரதேசங்களில் நட்சத்திர விடுதிகள் மற்றும் தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது