உலகில் மிகவும் நட்புறவான மக்கள் சிங்கள பௌத்த இன மக்கள்

சிறுபான்மை இனத்தவர்கள் ஐக்கியமாக வாழக் கூடிய உலகில் மிகவும் நட்புறவான இனம் சிங்கள பௌத்த இன மக்கள் என ஜனாதிபதி சட்டத்தரணியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் வேட்பாளருமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

குருணாகலில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் சம்மேளத்தின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இனங்களுக்கு இடையில் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்படுவது சாதாரணமானது, அவற்றை தீர்த்துக்கொள்ள முடியும்.

சிலர் இனவாதத்தின் பின்னால் சென்று இனவாத அரசியலை செய்தனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸாக மாறியது.

அது மற்றுமொரு காங்கிரஸாக மாறி காங்கிரஸ் குட்டிகளை ஈன்றது. நாம் ஒரு நாடாக முன்நோக்கி செல்ல வேண்டுமாயின் நாம் இலங்கையராக ஒன்றிணைய வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் கோட்டாபய ராஜபக்சவை பற்றி எப்படியான பொய்களை கூறினார்கள். கோட்டாபய ராஜபக்சவை பெரிய பிசாசாக உருவகப்படுத்தினார்கள்.

எனினும் கடந்த 8 மாதங்கள் ஜனாதிபதியாக மிகவும் அழகாக வேலைகளை செய்து வருகிறார் எனவும் அலி சப்றி குறிப்பிட்டுள்ளார்.

அலி சப்ரி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வழக்குகளில் ஆஜராகி வாதாடி வரும் பிரதான சட்டத்தரணிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.