வெலிக்கட சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர் தொடர்பான தகவல்

வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்றுறுதியான கைதி, அங்குள்ள சிகை அலங்கார பிரிவில் பணியாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, அவரிடம் சுமார் 170 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அவரிடமிருந்து சேவையை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர்களை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு சிறைச்சாலை பொது சுகாதார பரிசோதகர்கள் தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கொவிட்-19 தொற்றுறுதியான கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் ஆலோசகராக செயற்பட்ட 27 வயதுடைய பெண்ணுடன் சம்பந்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்டு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 29 பேருக்கு இன்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் முடிவுகள் இன்று பிற்பகல் வேளையில் கிடைக்கப்பெறவுள்ளது.

இதேநேரம், அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ந்தும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்றைய தினம் இறுதியாக தொற்றுறுதியான மூன்று பேரும், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் பணிக்குழு உறுப்பினராக செயற்பட்ட ஒருவரும், அவரின் பிள்ளைகள் இருவரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களுடன் சம்பந்தப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதேச சுகதார வைத்திய அதிகாரி எச்.ஏ.அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பலாலி வான்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 100 பேர் இன்று அங்கிருந்து வீடுதிரும்பியுள்ளனர்.

மத்திய கிழக்கில் இருந்து நாடுதிரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே இவ்வாறு வீடுதிரும்பியதாக வான்படை பேச்சாளர் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்ததை அடுத்து, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கூறியுள்ளார்.