சூரியன் ஏன் சிவப்பாக தோன்றுகிறது? காரணம் தெரியுமா? அறிவியல் தகவல்

கண்ணைக் கவரும் இந்தக் காட்சி நன்கு தெரிந்ததுதான். ஆனால் இது எப்படி நிகழ்கிறது என்று தெரியுமா?

பெரும்பாலும் சூரியன் மறையும்போதோ உதிக்கும் போதோ இந்த நிகழ்வைக் காண முடியும்

சூரியன் சிவப்பாக மாறும். வானம் ஆரஞ்சு, சிவப்பு அல்லது ஊதா வண்ணமாக மாறியிருக்கும்.

அது ஒரு கவிதையைப் போல, காதல் வயப்பட்டு, மனதை ஈர்க்கும் வகையில் இருக்கும்…. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக அதற்கு முழுக்க, முழுக்க அறிவியல் காரணம் உள்ளது.

நீங்களே ஒரு முறை பாருங்கள். ஆனால், எப்போதும் நேரடியாக சூரியனைப் பார்க்கக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!

பைனாகுலர் அல்லது டெலஸ்கோப் மூலம் அதைப் பார்க்கலாம் என நினைத்துக் கூடப்பார்க்க வேண்டாம் – அது உங்களுடைய பார்வைத் திறனை பாதித்து, நிரந்தரமாக பார்வையின்மை ஏற்படலாம்.

நகரில் சிறந்த ஷோ

சொர்க்கத்தைப் போன்ற அற்புதமான இந்தக் காட்சியை வர்ணிக்க உங்களுக்கு வார்த்தைகள் கிடைக்காது. ஆனால் இரண்டும் சேர்ந்த ஒரே நிகழ்வு இதில் உள்ளது. அதுதான், ஒளிச்சிதறல்.

இவை அனைத்துமே முன்பு இயற்பியலில் படித்தவை. “பூமியின் காற்று மண்டலத்தில் சூரியனின் ஒளிக்கற்றைகள் நுழையும் போது ஏற்படக் கூடிய கண்ணாடி ஒளிச்சிதறல் குணாதிசயங்கள்தான் இவை” என்கிறார் கிரீன்விச் ராயல் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த வானியல் நிபுணர் எட்வர்ட் புளூமர் கூறுகிறார்.

முதலில் நாம் ஒளியைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும். கண்ணால் காணக் கூடிய – சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், இண்டிகோ எனப்படும் கருநீலம் மற்றும் வயலெட் – என அனைத்து நிறங்களின் கலவை தான் ஒளி.

“சூரியனின் ஒளியில் சிதறல் ஏற்படுகிறது – ஆனால் அது சம அளவில் நடப்பதில்லை” என்கிறார் புளூமர்.

ஒவ்வொரு நிறத்திற்கும் அலைநீளம் மாறுபடும். அதனால்தான் ஒவ்வொரு நிறத்தின் கலவையும் வெவ்வேறு மாதிரி தெரிகிறது.

உதாரணமாக, வயலெட் நிறத்தின் அலை நீளம் தான் மிகவும் குறைவானது. சிவப்பு நிறத்தின் அலை நீளம் மிகவும் அதிகமானது.

அடுத்தது காற்று மண்டலத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் உள்ளிட்ட வாயுக்களின் அடுக்குகளைக் கொண்டதாக அது இருக்கிறது. இந்த காற்று மண்டலம், நமது பூமியைச் சுற்றிலும் இருந்து, நாம் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கிறது.

ஒளிச் சிதறல்

வெவ்வேறு காற்று அடுக்குகள் வழியாக சூரியனின் ஒளிக்கதிர்கள் செல்லும்போது, வெவ்வேறு தின்மங்களைக் கொண்ட ஒவ்வொரு வாயுவின் வழியாகச் செல்லும்போது, ஒரு பிரிசத்தின் வழியாகச் செல்லும் போது பிரிவதைப் போல, வளைந்தும், சிதறியும் செல்கிறது.

மேலும் காற்று மண்டலத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் துகள்கள் இந்த ஒளிச்சிதறல்களை உள்வாங்கிப் பிரதிபலிக்கின்றன.

சூரியன் மறையும் போதோ உதிக்கும்போதோ, காற்று மண்டலத்தின் உயரத்தில் உள்ள அடுக்குகளை குறிப்பிட்ட ஒரு கோணத்தில் சூரியனின் கதிர்கள் கடக்கின்றன. அங்கு தான் அந்த “மேஜிக்” ஆரம்பமாகிறது.

மேல் அடுக்குகளில் சூரியனின் கதிர்கள் ஊடுருவும்போது, நீல நிற அலைநீளங்கள் சிதறடிக்கப்பட்டுகின்றன. அவை கிரகிக்கப்படுவதற்குப் பதிலாக, பிரதிபலிக்கின்றன.

“சூரியன் கீழ்வானத்தில் இருக்கும்போது, நீலம், பச்சை ஆகிய நிறங்கள் சிதறடிக்கப்படுகின்றன. ஆரஞ்சு கலந்த சிவப்பு பளபளப்பு நம் கண்களுக்குத் தெரிகின்றன” என்று புளூமர் விளக்குகிறார்.

அதாவது குறைந்த அலைநீளம் கொண்ட வயலெட் மற்றும் நீல நிறம் ஆகியவை, அதிக அலைநீளம் கொண்ட ஆரஞ்சு, சிவப்பு நிறங்களைவிட அதிகமாக சிதறடிக்கப்படுகின்றன. அதனால் வானத்தில் கவர்ச்சியான வண்ணங்களின் சேர்க்கையை நாம் காண்கிறோம்.

ஆனால் மிகவும் சிவப்பாக இருக்கிறதே!

ஆமாம், அப்படித்தான் தோன்றும். ஆனால் அது வெறும் தோற்றம் மட்டுமே. சூரியனில் ஒரு அங்குலம் அளவுக்குகூட எந்த மாற்றமும் நடக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உலகில் எந்தப் பகுதியில் இருக்கிறீர்கள் என்பதைப் பொருத்து, உள்ளூரில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலைகளின் காரணமாக, வானம் மிகவும் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம்.

“தூசி மேகங்கள், புகையாக தோன்றலாம். நீங்கள் வானத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொருத்தும் அது அமையும்” என்கிறார் புளூமர்.

எனவே நீங்கள் இந்தியா, கலிபோர்னியா, சிலி, ஆஸ்திரேலியா அல்லது ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் அல்லது சிவப்பு மணல் பகுதிகளுக்கு அருகில் இருந்தால், உங்களுடைய காற்று மண்டலத்தில் ஒளியைப் பிரதிபலிக்கும் துகள்கள் அதிகமாக இருக்கும். வானிலைக்கு ஏற்ப இது மாறுபடும்.

“சிவப்பு தூசிகள் காற்றில் பரவும் போது நடப்பது போல, செவ்வாய் கிரகத்தைப் போல இது நடந்து, வானம் சிவப்பு கலந்த பிங்க் நிறமாகத் தோன்றும்” என்று புளூமர் கூறியுள்ளார்.

நீங்கள் பாலைவனத்திலோ (அல்லது செவ்வாய் கிரகத்தில் இருந்து) தொலைதூரத்தில் வசித்தாலோ கூட, இந்த அற்புதமான வானத்தின் காட்சியை உங்களால் பார்க்க முடியும். சஹாரா பாலைவன மணல் துகள்கள் அடிக்கடி காற்று மண்டலத்தின் மேலடுக்குகளில் ஊசலாடிக் கொண்டிருக்கும். அது ஐரோப்பா மற்றும் சைபீரியாவைக் கடந்தும், அமெரிக்காவை கடந்தும் கூட பரவியிருக்கும்.

இது இப்போது ஏன் நடக்கிறது?

இப்போது நடப்பதில் தனித்துவம் எதுவும் இல்லை. ஆனால் மாறுபட்ட வகையில் நாம் இதைப் பார்க்கிறோம் என்பதில் தான் மாற்றம் இருக்கிறது.

இந்த முடக்கநிலை காலம் முழுவதும், மக்கள் வானத்தின் மீது அதிக கவனம் செலுத்துவதை நாம் பார்த்து வருகிறோம்'' என்று புன்னகையுடன் புளூமர் கூறுகிறார்.அநேகமாக வேறு வேலை இல்லை என்பது இதற்குக் காரணமாக இருக்கலாம்” என்று அவர் குறிப்பிடுகிறார்.

திரையரங்குகள், கலையரங்குகள், இரவு நேர கேளிக்கை விடுதிகள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ள நிலையில், அதிக நேரம் வீட்டில் இருக்கிறோம், ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மேலும், விமான போக்குவரத்தும் இல்லாததால், மாசுபாடு அளவு குறைவாக உள்ளது. அதனால் மக்கள் வானத்தைப் பார்க்கவும், நட்சத்திரக் கூட்டங்களைப் பார்க்க முடிகிறது என்றும் புளூமர் கூறுகிறார்.

ஒரு வானவில்லை வரைதல்

பகல் பொழுதில் இடைப்பட்ட நேரத்தில் வானம் ஏன் நீல நிறத்தில் தோன்றுகிறது என்பதற்கான காரணத்தை ஒளிச்சிதறல் செயல்பாடு விளக்குகிறது.

சூரியன் வானத்தின் உச்சியில் இருக்கும்போது, காற்று மண்டலத்தில் சிதறல் ஏதும் இல்லாமல் அதன் ஒளிக்கதிர்கள் பாய்கின்றன. அது வரும் போது அப்படியே கிரகிக்கப்படுவதால், பிரதானமாக நீல நிறம் மட்டும் கண்ணுக்குத் தெரிகிறது.

ஆனால் வானிலைக்கு ஏற்ப இந்தக் காட்சி மாறுபடும்.

சூரியன் பிரகாசமாக இருக்கும்போது மழை பெய்தால், சூரிய ஒளி ஒவ்வொரு மழைத்துளியின் மீதும் படும்போது வெவ்வேறு அலைநீளத்துக்கு சிதறடிக்கப்படும். அதனால் எல்லா நிறங்களும் காற்று மண்டலத்தில் சிதறிவிடும்.

19 ஆம் நூற்றாண்டில் சூரிய ஒளி மற்றும் காற்று மண்டலத்தை லார்டு ரேலே (Lord Rayleigh) அதிக நேரம் கவனித்து, வானம் ஏன் நீல நிறமாகத் தோன்றுகிறது என்று முதன்முதலில் விளக்கம் அளித்தார். அவர் சொன்ன காரணத்தால் நாம் இவற்றையெல்லாம் அறிந்து கொண்டிருக்கிறோம்.

தகவல் – பிபிசி தமிழ்