ஆணைக்குழுவில் பூஜித் ஜயசுந்தர வழங்கிய இரகசிய சாட்சியம்

தமிழ் ​செய்திகள் இன்று


ஆணைக்குழுவில் பூஜித் ஜயசுந்தர வழங்கிய இரகசிய சாட்சியம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தாக்குதலை தடுக்க தவறியதாக தெரிவித்து ‘தான்தோன்றி தனமான முறையில்’ விளக்கமறியளில் வைக்கப்பட்ட தன்னாள் தனது புதல்வனின் திருமணத்தில் கூட பங்குபெற முடியாமல் போனதாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மிகவும் உணர்ச்சி வசப்பட்டு தக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (26) சாட்சி வழங்கும் போது தெரிவித்தார்.

தன் புதல்வரின் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடம் அனுமதி கேட்டப்போதும் அதனை அவர்கள் ஒரு மனிதாபிமான நிகழ்வாகக்கூட எண்ணி அனுமதி வழங்கவில்லை எனவும் அவர் கூறினார்.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசூந்தர நேற்று (26) மாலை தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி இறுதித் தடவையாக சாட்சியமளித்தார்.

இதன்போது பூஜித் ஜயசுந்தர பிரதிநிதித்துவப்படுத்திய ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, 2008 க்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பு பேரவை கூட்டத்திற்கு அழைக்கவில்லை என கூறினீர்கள். இப்போது சொல்லுங்கள் உங்களுக்கு பதிலாக வேறு அதிகாரிகள் அந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டனரா? என வினவினார்.

இதற்கு பதிலளித்த பூஜித் ஜயசூந்தர…

‘எனக்கு பதிலாக முன்னாள் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பாளராக இருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவை பாதுகாப்பு பேரவைக்கு அழைத்தாக அண்மையில் ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால் அவர் ஒரே ஒரு நாள் மாத்திரமே அங்கு அழைக்கப்ட்டதாக அவர் ஆணைக்குழுவில் சாட்சி வழங்கியதாக அறிந்துக் கொண்டேன்.

இதன்போது ஆணைக்குழுவின் தலைவர்…

வணாத்தவில்லு பகுதியில் வெடிபொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்ட போது அவை ஏதேனும் பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடையது என முன்னாள் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பாளராக இருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன உங்களிடம் கூறினார் அல்லவா? அப்படியிருந்த போது ஏப்ரல் 4 ஆம் திகதி வெளிநாட்டு புலனாய்வு தகவல் பணிப்பாளர் உங்களுக்கு வழங்கிய தகவல்கள் குறித்து ஏன் கூடிய அவதானம் செலுத்தவில்லை?

இதற்கு பதிலளித்த பூஜித் ஜயசுந்தர…

நீதிபதி அவர்களே ரவி செனவிரத்ன எனக்கு வாணாத்தவில்கு சம்பவம் பற்றி கூறியது நினைவில் இல்லை. ஆனால் அவ்வாறன விடயத்தை கூறினார் என்பது ஞாபகத்தில் உண்டு. வெளிநாட்டு புலனாய்வு தகவல்களுடன் வணாத்துவில்லு பகுதியில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டமைக்கு தொடர்பு இருப்பதாக கூறியிருந்தால் பூரண தெளிவடைந்து செயற்பட்டிருக்க முடியும்.

மீண்டும் மீண்டும் நான் கூறுவது என்னவென்றால் அரச புலனாய்வு சேவையினால் குறித்த புலனாய்வு தகவல் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறித்து பிரச்சினை உள்ளது. ஏனெனில் அரச புலனாய்வு பணிப்பாளர் அந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை.

அதில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாகவே கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில் இதற்கு நான் நடவடிக்கை எடுத்திருந்தால், உறுதிப்படுத்தாத தகவல் தொடர்பில் நீங்கள் எப்படி நடவடிக்கை எடுத்தீர்கள் என வினவியிருக்க கூடும்.

இதனையடுத்து தாக்குதல் நடந்த ஒரிரு நாளில் அமைக்கப்பட்ட மலல்கொட குழு குறித்து ஆணைக்குழு அவரிடம் வினவியது.

இதற்கு பதிலளித்த பூஜித் ஜயசுந்தர…

‘நீதிபதி அவர்களே, மலல்கொட குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி கூறியிருந்தாலும் அதனை அவர் பகிரங்கப்படுத்தவில்லை. தகவல் அறியும் சட்டத்திற்கு அமைய நான் அதை கேட்டேன். கிடைக்கவில்லை பின்னர் மேன்முறையீடு செய்தும் அந்த குழுவின் அறிக்கை கிடைக்கவில்லை.

நீதிபதி அவர்களே முன்னாள் ஜனாதிபதி இந்த ஆணைக்குழுவிடம், என்னை கட்டாய விடுமுறையில் அனுப்பியதற்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என கூறியிருந்தார். நீதிபதி அவர்களே தாக்குதலின் பின்னர் அதற்கான பொறுப்பை ஏற்று பதவி விலகுமாறு கூறிய பின்னர் ஏப்ரல் 29 ம் திகதி கட்டாய விடுமுறையில் அனுப்பப்படுவதாக தெரிவிக்கும் கடிதம் முன்னாள் ஜனாதிபதியின் கையொப்பத்துடனேயே எனக்கு கிடைத்தது என்றார்.

சாட்சி விசாரணைகளின் பின்னர் விசேட விடயம் ஒன்றை இரகசியமாக கூறுவதற்கு பூஜித் ஜயசுந்தர ஆணைக்குழுவில் அனுமதி கேட்ட போது, அப்போது ஆணைக்குழுவில் இருந்த ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டு அவருக்கான அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து அவர் தனது இரகசிய வாக்குமூலத்தை ஆணைக்குழுவுக்கு வழங்கினார்.