சஜித் தலைமையில் அதிரடிக்குத் தயாராகும் கூட்டணி

தமிழ் ​செய்திகள் இன்று


சஜித் தலைமையில் அதிரடிக்குத் தயாராகும் கூட்டணி

ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கான புதிய யாப்பு கட்சியின் செயற்குழுவினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பண்டாரவளையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த யாப்பின் பிரகாரம் கட்சியின் தலைவர் உள்ளிட்ட நிர்வாக சபை வருடத்திற்கு ஒரு தடவை புதுப்பிக்கப்பட வேண்டும். புதிய யாப்பின் படி கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாஸ செயற்படுவார். புதிய யாப்பில் பிரதித் தலைவர் உப தலைவர் பதவிகள் உள்வாங்கப்படவில்லை.

கட்சிக்கு தவிசாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அந்த இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசிம் நியமிக்கப்படவுள்ளார்.

பிரதித் தலைவர், உப தலைவர் பதவி நீக்கம்

யாப்பின் படி சிரேஸ்ட உப தவிசாளர்கள் 6 பேர் நியமிக்கப்படுவர் அந்த பதவிகளுக்கு தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, ராஜித சேனாரத்ன, பாட்டளி சம்பிக்க ரணவக்க, தலதா அத்துகொரல, இம்தியார் பாகிர் மாக்கார் மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 5 உப தவிசாளர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு ரவி சமரவீர, சுஜீவ சேனசிங்க, அஜித் பி பெரேரா, சந்திரானி பண்டார மற்றும் ரஞ்சித் அலுவிஹாரே ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

பொதுச் செயலாளர் – தேசிய அமைப்பாளர் தெரிவு

கட்சியின் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை தொடர்ந்து வைத்திருக்க முடிவு செய்யப்பட்டதுடன் தேசிய அமைப்பாளராக திஸ்ஸ அத்தநாயக்க செயற்படுவார்.

உப செயலாளராக அசோக அபேசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சுஜீவ சேனசிங்க உப செயலாளராக நியமிக்கப்படக் கூடும் என தெரிய வருகிறது. அசோக அபேசிங்க உப தவிசாளர் பதவிக்கு நியமிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொருளாளராக ஹர்ச டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

80 பேர் அடங்கிய செயற்குழு

கட்சியின் செயற்குழுவில் 80 உறுப்பினர்களை உள்வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை முதலமைச்சர்கள் அல்லது எதிர்கட்சித் தலைவர்கள் உத்தியோகபூர்வமாக செயற்குழுவிற்கு உள்வாங்கப்படுவர்.

அத்துடன் கட்சியின் உள்ளூராட்சி சபை தலைவர்கள், செயலாளர்கள் நால்வரும், தொழிற்சங்க பிரதிநிதிகள் மூவரும் மகளிர் பிரிவில் இருவரும் இளைஞர் பிரிவில் இருவரும் செயற்குழுவில் அங்கம் வகிப்பர்.

அத்துடன் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் பரிந்துரை செய்யப்படும் 32 செயலணிகளின் பிரதிநிதிகளும் செயற்குழுவில் அங்கம் வகிப்பர்.

ஐக்கிய மக்கள் கூட்டணி

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கூட்டணி கட்சிகளை ஒன்றிணைக்கும் முகமாக ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் தலைவராகவும் சஜித் பிரேமதாஸ செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைமைத்துவ சபை ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதன் உறுப்பினர்களாக மனோ கணேசன், பழனி திகாம்பரம், ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியூதின் மற்றும் ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் சார்பில் ஒருவர் நியமிக்கப்பட உள்ளனர்.