பௌத்த தேரரின் உடலை சுமந்து சென்ற முஸ்லிம்கள்

திருகோணமலையில், அரிசிமலை ஆரன்ய சேனாசன பிரிவிற்குரிய யான்ஓய ரஜமகா விகாரையின் விகாராதிபதி எலகம்மில்லவ சுகூதிவங்ச தேரர் அண்மையில் இறைபதம் அடைந்ததுடன், அவரது இறுதிக்கிரியைகள் நேற்று அரிசிமலை ஆரண்யவின் சேனாதிபதி பனாமுரே திலவங்ச தேரரின் வழிகாட்டுதலின் கீழ் இறுதி மரியாதையுடன் நடைபெற்றது.

இறுதிக்கிரிகைகளில் புல்மோட்டை பிரதேச முஸ்லிம் உலமாக்கள், பொதுமக்கள், தமிழ் சகோதரர்கள் இறுதிக்கிரியைகள் நிறைவுபெறும் வரை கலந்து கொண்டதுடன், முஸ்லிம் உலமாக்கள் தேரரின் உடல் தாங்கிய பேழையை தகனம் செய்யும் இடத்திற்கு சுமந்து சென்றமை அனைவர் மத்தியிலும் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் அண்மையில் புல்மோட்டை பிரதேசத்தில் காலமான உலமா ஒருவரின் இறுதிக்கிரியைகளில் அரிசிமலை ஆரண்யவின் சேனாதிபதி பனாமுரே திலவங்ச தேரர் தலைமையிலான தேரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

யான்ஓய ரஜமகாவிகாரையின் விகாராதிபதி எலகம்மில்லவ சுகூதிவங்ச தேரரின் இறுதிக்கிரியையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கபில நுவன் அத்துக்கோராள, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

(திருகோணமலை நிருபர்)

You may also like...