புதிய கொரோனா வைரஸ் இலங்கையில் பரவ ஆரம்பித்தால் பாதுகாப்பது மிகவும் கடினம்

இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட புதிய வைரஸ் ஆசிய விளிம்பையும் ஆக்கிரமித்துள்ளது. இலங்கையில் இந்த வைரஸ் பரவ ஆரம்பித்தால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு மிகச் சிக்கலானதாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (25) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
இங்கிலாந்தில் புதிய வைரஸ் பரவல் இனங்காணப்பட்டுள்ளது. தென் கொரியாவில் இனங்காணப்பட்ட வைரஸே இங்கிலாந்திலும் பரவியுள்ளது என்று நம்பப்படுகிறது.

இந்த வைரஸானது இளைஞர்கள் மத்தியில் தீவிரமாக பரவக் கூடியதொன்றாகும். சிங்கப்பூர் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது.

ஆசிய விளிம்பையும் இந்த வைரஸ் ஆக்கிரமித்துவிட்டது. இவ்வாறிருக்கையில் இந்த புதிய வைரஸ் இலங்கையிலும் பரவாதிருப்பதை தடுப்பதற்கு எமக்கிருக்கும் காலம் குறைந்துகொண்டு வருகிறது.

மத்திய கிழக்கு நாடுகளிலும் இந்த வைரஸ் இனங்காணப்பட்டுள்ளமையால் அவர்கள் ஊடாக நாட்டுக்கு இதன் தாக்கம் ஏற்படக் கூடும்.

சிங்கப்பூரானது இலங்கைக்கு மிக அருகிலுள்ள நாடாகும். அந்த நாட்டிலிருந்து நேரடியாக விமான சேவைகள் இலங்கையுடன் தொடர்புபடுகின்றன.

எனவே அங்கு இந்த வைரஸ் தாக்கம் ஆரம்பித்துள்ளதென்றால் நிச்சயமாக இலங்கையிலும் தாக்கம் செலுத்தக் கூடும். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது மிகக் கடினமானதாகும் என்றார்.

You may also like...