மாவனல்லையில் வெடிபொருட்கள் காணாமல் போன சம்பவம் – CID விசாரணை

மாவனெல்லை, துங்ககந்தவில் கல்லுடைப்பதற்காக எடுத்து வரப்பட்டதாக கூறப்படும் 19 கிலோ வெடிபொருட்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பிலான விசாரணைகள் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இந்த விசாரணைகளை சிஐடியினரிடம் கையளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னர், மாவனெல்லையை மையப்படுத்தி புத்தர் சிலை உடைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றமை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும், தற்போது காணாமல் போயுள்ள ரகத்தை ஒத்த வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டமை உள்ளிட்ட விடயங்களை கவனத்தில் கொண்டே இந்த விசாரணைகள் சிஐடியினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சி.ஐ.டி.யின் 5 குழுக்கள் இது குறித்த விசாரசரணைகளை ஆரம்பித்துள்ளன. 32 அதிகாரிகள் இந்த விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

கல்லுடைப்புக்காக, மாவனெல்லை, நியூலேன்ட் தோட்ட, கல்குவாரி ஒன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக கடந்த 23 ஆம் திகதி மாவனெல்லை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.

எவ்வாறாயினும் அந்த முறைப்பாட்டில் அங்கு சேவையில் இருந்த ஒருவர் மீது சந்தேகம் தெரிவிக்கப்பட்டபோதும், அவர் அவற்றை திருடிய சான்றுகள் இன்றுவரை உறுதி செய்யப்படாத நிலையிலேயே விசாரணைகள் சிஐடியினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

சுமார் 300 பேரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 

You may also like...