ஜனாஸா அடக்கம் தொடர்பில் அரசியல் ரீதியாக முடிவெடுக்க வலியுறுத்தல்

இறந்தவர்களின் ஜனாஸா அடக்கம் செய்வது தொடர்பில் அரசியல் ரீதியாக முடிவெடுக்குமாறு மக்கள் வலியுறுத்துகிறார்கள் என மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

185 நாடுகளில் இறந்தவர்களின் ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்படுகிறது. ஆனால் ஆரம்பத்தில் இருந்து இங்குள்ள சுகாதார பிரிவினர் அடக்கம் செய்தாலும் வைரஸ் பரவும் எனக் கூறுகிறார்கள். அது ஒரு பெரும் பிரச்சனை.

இது பல்லின நாடு. இங்கு பல இனங்கள் இருக்கிறது. அவர்களுடைய மத சுதந்திரத்தை வழங்க வேண்டும். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்வது தான் மரபு.

அந்த உரிமை கிடைக்க வேண்டும். கொரோனா ஏற்பட்டத்தில் இருந்து இறந்தவர்களை எரிப்பதால் அந்த சமூகம் பாதிப்படைந்துள்ளது. அவர்களது மதக் கடமைக்கு பாரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

நாங்கள் ஆளும் தரப்பு எம்.பி என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக பேசி வருகின்றோம். இது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள நிபுணத்துவ குழு மற்றும் அரச தலைவர்களுடன் பேசி வருகின்றோம்.

இந்த நிலமைகளை மாற்றி அடக்கம் செய்யும் நிலைக்கு கொண்டு வர முயற்சிகிறோம். அதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

அந்த சமயத்தவர்கள் இனியும் காலத்தை இழுத்தடிக்க முடியாது என்பதால் அரசாங்கத்திற்கு உணர்த்துவதநற்காக ஜனநாயக ரீதியாக போராடுகிறார்கள். மக்கள் அரசியல் ரீதியாக முடிவெடுக்குமாறு வலியுறுத்துகிறார்கள்.

அவர்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது. முழுமையாக இஸ்லாமியரும், கிறிஸ்தவரும், பௌத்த மக்களின் ஒரு பிரிவினரும் பாதிப்கப்பட்டுள்ளார்கள். உலக சுகாதார ஸ்தாபனம் கூறும் விடயங்களை பார்க்கிறார்கள்.

ஏனைய சமூகத்தின் ஆதங்கங்களை புரிந்து உரிமைகளை அரசு வழங்க வேண்டும் என அரசுடன் பேசி வருகின்றோம். எனவே எதிர்காலத்தில் மையங்களை அடக்கம் செய்யும் நிலைமை வரும் என நம்புகின்றோம் என்றார்.

-வவுனியா நிருபர்-

You may also like...