ஜனாஸா எரிப்பு – சுகாதார அமைச்சின் செயலாளர் வௌியிட்ட அறிவிப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


ஜனாஸா எரிப்பு – சுகாதார அமைச்சின் செயலாளர் வௌியிட்ட அறிவிப்பு

கொரோனா தொற்று ஏற்பட்டு மரணிப்பவர்களின் உடல்களை புதைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை பகல் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பேசியபோது அவர் இத்தகவலை உறுதிபடத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கொரோனா மரண உடல்களை புதைப்பதற்கான எந்த தீர்மானத்தையும் சுகாதார அமைச்சு எடுக்கவில்லை. அவ்வாறான உடல்களை எரிப்பதாக கடந்த மார்ச் மாதமே தீர்மானிக்கப்பட்டது.

இதற்கிணங்க அமைக்கப்பட்டுள்ள விசேட மருத்துவர்கள் அடங்கிய குழு தற்சமயம் கலந்துரையாடி வருகிறது. ஏதும் மாற்றுத் திட்டங்கள் இருந்தால் மக்களுக்கு அறிவிப்போம்.

அதுவரை உடல்கள் எரிக்கப்படுவதே அரசாங்கத்தின் செல்லுபடியான தீர்மானமாகும்” என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும் கொவிட்-19 காரணமாக மரணிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கை சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.