மாகாண சபைத் தேர்தல் மீண்டும் பிற்போடப்பட்டது

தமிழ் ​செய்திகள் இன்று


மாகாண சபைத் தேர்தல் மீண்டும் பிற்போடப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்று மற்றும், மகா சங்கத்தினரின் கோரிக்கைகளுக்கு அமையவும் நாட்டில் ஏற்பட்டுள்ள வேறு காரணங்களையும் ஆராய்ந்து பார்த்து, மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதென, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் (28) நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டது என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தொற்றின் மத்தியில், புதிய தேர்தல் முறையொன்று உருவாக்கப்படும் வரையும் மகா சங்கத்தினரால் முன்வைக்கப்பட்டுள்ள எதிர்ப்பையும் கவனத்தில் எடுத்தே, இத்தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“மாகாண சபைகளை இரத்துச் செய்ய வேண்டுமென்ற எண்ணம் நாட்டுக்குள் காணப்படுகின்றது. சிலர் மாகாண சபை இருக்க வேண்டுமென கூறுகின்றனர்.

எனினும், மாகாண சபை தேர்தலை, தற்போது நடத்துவது உசிதமானதல்ல” என்பதே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்றார்.