சுப்பர் முஸ்லிம் – பொலிஸ் மா அதிபரிடம் விஷேட அறிக்கை

அம்பாறை மாவட்டத்தின் கல்முனையைத் தளமாக கொண்டு செயற்படுவதாக கூறப்படும் ‘சூப்பர் முஸ்லிம்’ எனும் அமைப்பு அல்லது குழு தொடர்பிலான விசேட அறிக்கை ஒன்று பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிலும், மேல் மாகாண உளவுப் பிரிவிலும் சேவையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் கடந்த செவ்வாயன்று ( டிசம்பர் 29) இரகசிய அறிக்கையாக இந்த விசேட அறிக்கையை கையளித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்த சூப்பர் முஸ்லிம் எனும் அமைப்பு தொடர்பில், எஸ். ஐ.எஸ். எனபப்டும் தேசிய உளவுச் சேவை தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் முன்னர் சேவையாற்றியதாக கூறப்படும் வைத்தியர் ஒருவர் இந்தக் குழுவுக்கு தலைமை வகிப்பதாகவும், இணையத்தளம் ஊடாக இக்குழுவினர் அடிப்படைவாதத்தை விதைத்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அனர்த்தம் ஒன்றையடுத்து கிடைக்கப்பெற்ற நன்கொடைகளை வைத்து இவ்வமைப்பு தோற்றம் பெற்றுள்ளதாகவும், தற்போதும் வெளிநாட்டு நன்கொடைகள் இந்த அமைப்புக்கு கிடைப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.

இந்த சூப்பர் முஸ்லிம் எனும் அமைப்பின் தலைவராக கருதப்படும் நபரும் அந்த அமைப்பின் போதகர்களும் யூ ரியூப் மற்றும் பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக தமது பிரசாரங்களை முன்னெடுப்பதாகவும், அவ்வமைப்பில் 33 செயற்பாட்டாளர்களும், 250 வரையிலான ஆதரவாளர்களும் உள்ளமை தொடர்பில் தகவல்கள் உள்ளதாகவும் பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையிலேயே அவ்வமைப்பு தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

You may also like...