ஜனாஸா எரிப்பு விவகாரம் – தனது அதிரடிக் கருத்தை வௌியிட்டார் மைத்திரி

கொரோனாவினால் மரணமடையும் தமது உறவுகளை அடக்கம் செய்வதற்கு முஸ்லிம் மக்களுக்கு உரிமை இருக்கிறது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

த ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் உலக சுகாதார அமைப்பின் கருத்துக்கு தாம் ஆதரவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை சமூகங்களின் உணர்வுகள் புண்படும்போது நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. ஜனநாயகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை இந்த நாட்டில் உள்ள அனைத்து இனத்தவர்களுக்கும் சமமாகப் பகிரப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் சிறுபான்மையினரைப் பற்றி எப்போதும் தீவிரமாக சிந்திக்க வேண்டியது பெரும்பான்மை இனக்குழுவின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர் என்பது ஒரு உண்மை. இதை மனதில் கொண்டு, தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு சமமான உரிமைகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும், என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதற்கிடையில் கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளர் தெரிவின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு பொதுஜன பெரமுனவினால் அநீதி இழைக்கப்பட்டது.

மாகாண சபைத் தேர்தலிலும் பொதுஜன பெரமுனவுடன் ஒரு கூட்டணியாக போட்டியிடும் நிலையையே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர்நோக்கியுள்ளது. எனினும் இதிலும் நியாயம் வழங்கப்படாவிட்டால் தனித்து போட்டியிடப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைகளை பற்றி கருத்துரைத்த அவர், இலங்கை ஒரு சிறிய நாடு என்ற உண்மையை கருத்தில் கொண்டு, மாவட்ட அளவில் ஒரு மாவட்ட மேம்பாட்டு வாரியம் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தால் அது மாகாண சபைகளை விட சிறப்பாக செயற்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

You may also like...