மட்டக்களப்பில் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னபுல்லுமலை பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினால் இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வீட்டிலிருந்து ஜெனி டெட்டனேட்டர்கள் 729 குச்சுகளும், அமோனியம் நைத்திரேட் 25 கிலோகிராம் நிறையுடைய 24 பைகள், வெடி பொருட்களுக்கான 178 வயர் ரோல்கள், 105 அலுமினியம் குச்சுகள், 31 வெடி என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதனுடன் தொடர்புபட்ட ஏனையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஏறாவூர் லக்கி வீதியைச் சேர்ந்த 53 வயதுடைய விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியாக ஜெயந்தன் படையணியில் 1991 இலிருந்து 1994 வரை இருந்துள்ளவர் என தெரியவருகிறது.

இதன் பின்னர் குறித்த நபர் கல்குவாரி தொழிலில் ஈடுபட்டு வருவதுடன், அதற்கான அனுமதிப்பத்திரத்துடன் வெடிபொருட்களை பயன்படுத்தி கல் உடைத்து வந்துள்ள நிலையில் கடந்த மாதம் இதற்கான அனுமதிப் பத்திரம் முடிவடைந்துள்ளதையடுத்து வெடிபொருட்களை கொள்வனவு செய்து அவர் மறைத்து வைத்துள்ளதாக தெரியவருகிறது.

You may also like...