மஹர சிறைச்சாலை சம்பவம் – அறிக்கை மூலம் வௌியான தகவல்கள்

மஹர சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் நீண்ட காலமாக கைதிகளுக்கு இடையில் நிலவிய சதித்திட்டத்தின் விளைவாக ஏற்படவில்லை என அது தொடர்பில் ஆராய்ந்த ஐவர் அடங்கிய குழுவின் இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை நேற்றைய தினம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை தயார் செய்த ஐவர் அடங்கிய குழு, சிறைச்சாலை அதிகாரிகள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் கைதிகள் உள்ளிட்ட 40 பேரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகளில் பற்றாக்குறை நிலவியதால் உரிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பும் வழங்கமுடியாமல் போயுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 கைதிகள் மாத்திரம் இருக்க வேண்டிய சிறை விடுதியில் 300 இற்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அந்த குழு அவதானித்துள்ளது.

கைதிகள் சுதந்திரமாக வசிப்பதற்கான அனுமதி வழங்கப்படாமையே இந்த அமைதியின்மைக்கு காரணம் என அந்த இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் 5 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

சுவையான உணவுகள் வழங்கப்பட வேண்டும், நீதிமன்றால் பிணை வழங்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும், பிணை வழங்காதவர்களுக்கு துரிதமாக பிணை வழங்க வேண்டும், கொவிட் 19 நோயர்களுக்கு சிகிச்சை வழங்க வேண்டும், அனைத்து கைதிகளுக்கும் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி சிறைச்சாலையில் காணப்பட்ட நெருக்கடி நிலையே இந்த மோதலுக்கான பிரதான காரணம் என அது தொடர்பில் ஆராய்ந்த குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You may also like...