விமானப்படை வீரர்கள் பாடசாலை ஆசிரியர்களா? கல்வியமைச்சரின் பதில்

பாடசாலைகளில் விமானப் படையினரை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கையெடுக்கப் பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாக கல்வி அமைச்சு அறிந்திருக்கவில்லை என்பதுடன் விமானப் படையினரை ஆசிரியர்களாக நியமிக்க கல்வி அமைச்சு எந்த அனுமதியையும் வழங்கியிருக்கவில்லையென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாடசாலைகளில் விமானப் படையினர் ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கையெடுக்கப் பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேவர்தனவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரோஹினி குமாரி விஜேவர்தன எம்.பி கேள்வியெழுப்பி குறிப்பிடுகையில்,

வவுனியா உள்ளிட்ட பிரதேசங்களில் விமானப் படையினர் பாடசாலைகளில் ஆங்கில மொழி ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளதாகவும், எதிர்காலத்தில் வேறு பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவரென்றும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக ஆசிரியர் சங்கங்களும் தகவல் வெளியிட்டுள்ளன. இவ்வாறான நியமனங்கள் ஆசிரியர் நியமன ஒழுங்கு விதிகளை மீறுவதாக அமையும்.

இது தொடர்பாக கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்ததா? என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கையில்,

எமது அமைச்சு அவ்வாறு எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை. அவ்வாறான நியமனங்களுக்கு நாங்கள் அனுமதிக்கவும் இல்லை. நீங்கள் கூறும் தகவல்கள் தொடர்பாக ஆராய்ந்து பார்க்கின்றேன் என்றார்.

 

You may also like...