இலங்கை வருகிறாரா பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்?

தமிழ் ​செய்திகள் இன்று


இலங்கை வருகிறாரா பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு திட்டம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த தகவலை இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் மஹ்முட் சாட் கட்டாக் வெளியிட்டுள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பாக்கிஸ்தான், உலகின் ஏனைய நாடுகளைப்போலவே இலங்கையின் இறையாண்மையை மதிக்கிறது.

இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடுவதை நம்பவில்லை. பிரதமர் இம்ரான் கானின் அரசாங்கம் இலங்கையுடன் நெருக்கமான உறவைக்கொண்டிருக்கவில்லை என்று கூறமுடியாது.

கொரோனா காரணமாக தடங்கல்கள் உள்ளன. எனினும் பிரதமர் இம்ரான் கானின் கொழும்பு வருகையும் திட்டமிடப்பட்டுள்ளது என்று உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு சீனா வழங்கும் உதவிகள் தொடர்பில் தவறான விளக்கங்களும் தவறான பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

மத சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் மீதான மனித உரிமை மீறல்களுக்காக பாகிஸ்தான் சர்வதேச அளவில் விமர்சிக்கப்படுகிறது.

சமீபத்தில் பாகிஸ்தானில் ஒரு இந்து கோயில் அழிக்கப்பட்டது உட்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த உயர்ஸ்தானகர் கட்டாக், பாகிஸ்தானில் ஜனநாயக சமூகம் சமீபத்திய ஆண்டுகளிலேயே வலுப்பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அடிப்படை சுதந்திரங்களுக்கும், பொதுமக்கள் பாதுகாப்பிற்கும் பெரும் முக்கியத்துவத்தை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.