முஸ்லிம்கள் அனைவரும் குர்ஆன் ஓதுவதை நிறுத்த வேண்டும் – பஞ்சாயத்து தலைவர்

முஸ்லிம்களுக்கு எதிராக உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் ‘இந்து பஞ்சாயத்து’ கூட்டப்பட்டதாகவும், வைரலான அதன் காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

“உ.பி.யின் மீரட்டில் மாநில அரசின் சவுத்ரி சரண்சிங் பல்கலைக்கழகம் உள்ளது. இதில் ஐந்து நாட்களுக்கு முன் சங்கராச்சார்யா பரிஷத் எனும் அமைப்பின் தலைவரான சுவாமி ஆனந்த் ஸ்வரூப் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது.

‘இந்து பஞ்சாயத்து’ எனப் பெயரிடப்பட்ட அக்கூட்டத்தில் ஏராளமான வலதுசாரி சிந்தனையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தலைமை ஏற்று பேசிய சுவாமி ஆனந்த் ஸ்வரூப்,

“முஸ்லிம்களுக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால், எங்களுடன் நீங்கள் இணைந்திருக்க வேண்டும் எனில், முதலில் அனைவரும் குரான் படிப்பதை நிறுத்த வேண்டும்” என்று கூறுவது சர்ச்சையாகி உள்ளது.

இதே காணொளியில் தொடர்ந்து பேசிய சுவாமி ஆனந்த் ஸ்வரூப், “இதற்காக முஸ்லிம்களின் கடைகளில் எதையும் வாங்கக் கூடாது என நாம் இந்துக்கள் முடிவெடுக்க வேண்டும்.

இதுபோல், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முஸ்லிம்களைப் புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தம் இஸ்லாத்தை விட்டு இந்து மதத்திற்கு மாறுவார்கள்” எனத் தெரிவிக்கிறார்.

இந்த நிலையில், இதுகுறித்து அந்த மாநில காவல்துறையினர் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.

இவர் கடந்த ஜனவரி 6ஆம் தேதி கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் – பிபிசி தமிழ்

You may also like...