சஹ்ரானோ விடுதலைப் புலிகளோ மீண்டும் தலைதூக்க முடியாது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் கடந்த காலத்தில் மிகவும் சிக்கலான பல சவால்களை வெற்றிகொள்ள முடிந்தது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்ததோடு மாத்திரமன்றி, ஸஹ்ரான் தலைமையிலான பயங்கரவாத செயற்பாடு மீண்டும் தலைதூக்க முடியாத வகையில் இப்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

செத்சிறிபாய மூன்றாவது கட்டடத்தொகுதியை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (22) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

கடந்த அரசாங்கம் எப்சிஐ.டி என்ற சட்டவிரோத பொலிஸ் பிரிவைப் பயன்படுத்தி அரச ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் அவர்கள் பணிபுரிய முடியாத சூழ்நிலையை உருவாக்கியது.

எனினும் அவர்கள் எவ்வித அச்சமும் சந்தேகமுமின்றி செயற்திறன்மிக்க வகையில் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சூழ்நிலையை நாம் தற்போது ஏற்படுத்திக்கொடுத்திருக்கின்றோம்
.
இப்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் முறியடிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மக்கள் அச்சமும் சந்தேகமுமின்றி வாழக்கூடிய சூழலை நாம் ஏற்படுத்தியுள்ளோம் என்று குறிப்பிட்டார்.

You may also like...