வவுணதீவு பொலிஸார் கொலையில் சஹ்ரானின் பின்னணி தொடர்பில் சானி அபேசேகர கூறிய விடயம்

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னர், வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட விவகாரத்தின் பின்னணியில், புலிகளை சாடியதாகவே தேசிய உளவுச் சேவை, இராணுவ புலனாய்வுப் பிரிவு ஆகியன விசாரணையாளர்களுக்கு அறிக்கை அளித்திருந்ததாக சிஐடி முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த பொலிஸாரின் கொலைகளின் பின்னணியில் ஸஹ்ரானினான் நெறிப்படுத்தப்பட்ட குழுவினரே இருந்தமை ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தாக்குதலின் பின்னரே கண்டறியப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2019 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள், அதன் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை இலக்குவைத்த வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் முதன் முறையாக நேற்று (25) சாட்சியமளிக்கும்போதே அவர் இதனை வெளிப்படுத்தினார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவான 42 ஆம் சிகிச்சையறையிலிருந்து ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக சாட்சியமளிக்கும்போதே அவர் இதனை வெளிப்படுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்கள், அதன் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை இலக்குவைத்த வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டது.

முன்னாள் சிஐடி. பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக சாட்சிகளை பெறுவதனை உறுதிப்படுத்திக்கொள்ள 2015 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க பாதிக்கப்பட்டோர் சாட்சிகள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 8 ஆம் பிரிவின் 31 ஆவது அத்தியாயத்துக்கு அமைய அடிப்படை கேள்விகளையடுத்து அனுமதி பெறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரசின் சிரேஷ்ட சட்டவாதி சஞ்ஜீவ திஸாநாயக்கவின் நெறிப்படுத்தலில் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

இதனைவிட, ஷானி அபேசேகர முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மீதான குண்டுத் தாக்குதல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ கொலை முயற்சி, பாரத லக்ஷ்மன் படுகொலை, உடதலவின்ன படுகொலை, கட்டுநாயக்க விமான நிலையம் மீதான தாக்குதல், முன்னாள் எம்.பி. ரவிராஜ் படுகொலை, பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, தாஜுதீன் படுகொலை, லசந்த விக்ரமதுங்க படுகொலை, தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பாதுகாப்புச் செயலளாராக இருந்தபோது பித்தளை சந்தியில் வைத்து அவர் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல், அங்குலானை இரட்டைப் படுகொலை, 5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு கப்பம் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தவர் என்பதும் பதிவு செய்யப்பட்டது.

எவ்வாறாயினும் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தான், சி.ஐ.டி.யிலிருந்து காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக இடமாற்றப்படும்போதும், சி.ஐ.டி. பணிப்பாளராக 8,000 விடயங்கள் குறித்து மேற்பார்வை செய்து கொண்டிருந்ததாக ஷானி அபேசேகர சாட்சியமளித்தார்.

இதனைத் தொடர்ந்து சாட்சியங்களை நெறிப்படுத்திய அரசின் சிரேஷ்ட சட்டவாதி சஞ்ஜீவ திஸாநாயக்க, 2019 ஏபரல் 21 தாக்குதல்களுக்கு முன்னர் கடந்த 2018 நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட விடயம் தொடர்பிலான விசாரணைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சம்பவ தினமே விசாரணைகளை சிஐடி பொறுப்பேற்றதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயசிங்கவின் கீழ் பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித் திஸாநாயக்க, பொலிஸ் பரிசோதகர் உபாலி, சார்ஜன்ட் மெண்டிஸ் உள்லிட்ட குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்ததாகவும் ஷானி அபேசேகர குறிப்பிட்டார்.

இதன்போது இந்த சம்பவத்தில் சந்தேகத்தில் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் மட்டக்களப்பு பொலிஸ் பரிசோதகர் ஒருவரால் கைது செய்யப்பட்ட குறித்த நபரை சிஐடியிடம் கையளிக்கப்பட்ட பின்னர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்ததாகவும் ஷானி அபேசேகர கூறினார்.

இதன்போது குறித்த சம்பவத்தின் 5 நாட்களின் பின்னர் சம்பவ இடத்துக்கு அருகே இருந்து ஒரு பாடசாலை பை, தேசிய உளவுச் சேவை பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன வழங்கிய தகவலுக்கமைய மீட்கப்பட்டதாகவும் குறித்த புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினருடையது என நம்பத்தக்க ஜெகட், காற்சட்டை என்பன அதில் இருந்ததாகவும் ஷானி அபேசேகர கூறினார்.

அத்துடன் நவம்பர் 26 ஆம் திகதி வவுணதீவு பகுதியில் மா வீரர் நினைவு தின நிகழ்வுகளை குறித்த சந்தேக நபர் ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதனை வவுணதீவு பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்ததாகவும் ஷானி அபேசேகர கூறினார்.

இவ்வாறான பின்னணியில், சம்பவத்தின் பின்னர் தேசிய உளவுச் சேவையும் இராணுவ புலனாய்வுப் பிரிவும் தொடர்ச்சியாக தகவல்களை பகிர்ந்துகொண்டதாக கூறிய ஷானி அபேசேகர, அவ்வாறு பகிரப்பட்ட 6 அறிக்கைகளையும் அடையாளம் காட்டி அவை அனைத்திலும் குறித்த சம்பவம் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களால் செய்யப்பட்டவை என குறிப்பிடப்பட்டிருந்ததாக ஷானி அபேசேகர தெரிவித்தார்.

இவ்வாறான நிலையிலேயே குறித்த சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரித்து வந்ததாக கூறிய ஷானி அபேசேகர, எந்தவொரு உளவுத்துறை அறிக்கையும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் செயலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை கூட எழுப்பவில்லை என குறிப்பிட்டார்.

இந்நிலையிலேயே, ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர், சிஐடி.விசாரணையில் அந்த இரட்டைக் கொலை ஸஹ்ரானினால் நெறிப்படுத்தப்பட்ட அடிப்படைவாத குழு முன்னெடுத்த குற்றச் செயல் என்பது சாட்சிகளுடன் வெளிப்படுத்தப்பட்டதாகவும் ஷானி அபேசேகர கூறினார்.

தகவல் – மெட்ரோ நியுஸ்

You may also like...