​பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும்

தமிழ் ​செய்திகள் இன்று


​பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும்

பாண் உட்பட பேக்கரி உற்பத்திப் பொருட்கள் அனைத்தினதும் விலைகள் அடுத்த மாதம் முதல் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்தார்.

அத்துடன் அரசாங்கம் வரி குறைப்பை மேற்கொண்டால் மாத்திரமே விலை அதிகரிப்பை தவிர்க்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

பேக்கரி உற்பத்தி பொருட்கள் ஒரு சில கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்யப்படுவது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பேக்கரி உற்பத்திகளின் மூலப்பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பாண் உட்பட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளோம் .

எமது சங்கத்தினால் விலை அதிகரித்தாலும் இல்லாவிட்டாலும் விலை அதிகரிக்கப்படுவது நிச்சயமாகும். தற்போதும் சில பேக்கரிகளில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பேக்கரி மூலப்பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதால் நிவாரணம் ஒன்றை வழங்குமாறு நாங்கள் அரசாங்கத்துக்கு அறிவித்திருக்கின்றோம். இதுவரை எந்த தீர்மானத்தையும் வழங்கவில்லை.

பேக்கரி பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் எண்ணெய் ஒரு லீற்றர் 600 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது . இதற்கு அரசாங்கத்தினால் 250 ரூபா வரை வரி அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் ஒரு லீற்றர் எண்ணெய்க்கான விலை ஒருவருடத்துக்கு முன்னர் 250 ரூபாவாகவே இருந்தது. தற்போது அது 550 ரூபா வரை அதிகரித்திருக்கின்றது. உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பினாலே எமது நாட்டிலும் எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று பேக்கரி உற்பத்திகளின் மூலப்பொருட்கள் அனைத்தினதும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்கள் அனைத்தினதும் விலை அதிகரிக்கப்படுவதை கட்டுப்படுத்த முடியாது.

அத்துடன் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதாக இருந்தால் எண்ணெய்க்காக அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருக்கும் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இல்லாவிட்டால் அடுத்தமாதம் முதல் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என்றார்.